/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறை சுற்றிய காட்டு யானைகள் ரோட்டில் படுத்து உறங்கியதால் பீதி
/
மூணாறை சுற்றிய காட்டு யானைகள் ரோட்டில் படுத்து உறங்கியதால் பீதி
மூணாறை சுற்றிய காட்டு யானைகள் ரோட்டில் படுத்து உறங்கியதால் பீதி
மூணாறை சுற்றிய காட்டு யானைகள் ரோட்டில் படுத்து உறங்கியதால் பீதி
ADDED : டிச 26, 2024 05:30 AM

மூணாறு: மூணாறைச் சுற்றி பல எஸ்டேட் பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டு யானைகள் நடமாடின.
மூணாறைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகரித்தது. அவை பகல் வேளையில் ரோடு, தேயிலை தோட்டங்கள் ஆகியற்றில் சுற்றித் திரிவதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவும், நடமாடவும் அஞ்சுகின்றனர்.
இப்பகுதியில் சுற்றித்திரியும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை நயமக்காடு எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷன் பகுதியில் நேற்று முன்தினம் முகாமிட்டது. அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் திருவிழா நடப்பதால், தொழிலாளர்கள் பந்தல் அமைத்து வாழை மரங்கள் கட்டி இருந்தனர். அதனை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு இரண்டு முறை கோயில் பகுதிக்கு படையப்பா சென்றது. அதனை தொழிலாளர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கண்காணித்து விரட்டினர். அதே பகுதியில் முகாமிட்ட ஒற்றை கொம்பன், அங்கிருந்து வெளியேறி நேற்று காலை 6:00 மணிக்கு கடலார் எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் நடமாடியது.
சேதம்: தேவிகுளம் எஸ்டேட் லோயர் டிவிஷனில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்ட ஆறு காட்டு யானைகளை கொண்ட கூட்டம் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் முருகன் என்பவர் வீட்டு அருகே ரோட்டில் நிறுத்தி இருந்த காரை சேதப்படுத்தியது.
உறங்கிய யானை: கன்னிமலை எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள இரண்டு குட்டிகள் உள்பட நான்கு யானைகளை கொண்ட கூட்டம் நேற்று பகலில் டாப் டிவிஷனில் நடமாடின. அவை புல் உள்ளிட்ட தீவனங்களை நன்கு தின்றதால் உண்ட களைப்பில் இரண்டு யானைகள் ரோட்டில் படுத்து அயர்ந்து உறங்கின. அவற்றை இரண்டு யானைகள் காவல் காத்தன. யானைகள் உறங்கிய பகுதியில் இருந்து அரை கி.மீ., தொலைவில் கோயில் திருவிழா நடந்ததால் தொழிலாளர்கள் இரவில் அச்சத்துடன் கோயிலுக்கு சென்று வந்தனர்.