/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கஞ்சா சாகுபடியை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்படுமா? வேடிக்கை பார்க்கும் என்.ஐ.பி., தனிப்பிரிவு
/
கஞ்சா சாகுபடியை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்படுமா? வேடிக்கை பார்க்கும் என்.ஐ.பி., தனிப்பிரிவு
கஞ்சா சாகுபடியை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்படுமா? வேடிக்கை பார்க்கும் என்.ஐ.பி., தனிப்பிரிவு
கஞ்சா சாகுபடியை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்படுமா? வேடிக்கை பார்க்கும் என்.ஐ.பி., தனிப்பிரிவு
ADDED : ஆக 31, 2024 06:39 AM

சின்னமனுார் : மேகமலையில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை என பொது மக்கள் கூறிவருகின்றனர். இதனால் போலீசார் வனத்துறை இணைந்த சிறப்பு தனிப்படை (ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்) அமைத்து மேகமலை வனப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவது குறித்து தகவல் கிடைத்தது. உடனடியாக ஆந்திர வியாபாரிகளை கைது செய்து கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தேனி எஸ்.பி. சிவபிரசாத் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் எதிர்பாராத திருப்பமாக மேகமலையில் கஞ்சா சாகுபடி செய்திருப்பதாக வனத்துறையினர் புகாரில் சின்னமனுார் போலீசார் கஞ்சா செடிகளை அழித்து, நால்வரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பொது மக்களை மட்டும் இன்றி போலீசாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் அரசரடி, வெள்ளிமலை, பண்டார ஊத்து, ஹைவேவிஸ், மேகமலை பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கஞ்சா சாகுபடி நடந்து வந்தது. போலீசார் எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக சாகுபடி நிறுத்தப்பட்டது.
ஆனால் இப்போது திடீரென்று மேகமலையில் கஞ்சா தோட்டத்தை அமைத்துள்ளனர். மேலும் வனத்துறை தகவலில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீசார் கஞ்சா தோட்டத்தை கண்டறிந்து அழிக்கவில்லை.
மேகமலை, மணலாறு, மகாராஜா மெட்டு, வெண்ணியாறு, இரவங்கலாறு, வெள்ளிமலை என பரந்து விரிந்த வனப்பகுதிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் உள்ளது.
இதில் தனியார் பட்டா காடுகள், ஆட்கள் நடமாட்டமே இல்லாத பகுதிகள், போலீஸ் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகள் அதிகளவில் உள்ளன.
இதில் கஞ்சா சாகுபடி சர்வ சாதாரணமாக மேற்கொள்ள வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
இந்நிலையில் கஞ்சா சாகுபடியை தடுக்க வேண்டிய தேனியில் இயங்கும் என்.ஐ.பி., எனப்படும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பார்வையாளராகவே உள்ளனர்.
கடந்த 2 மாதங்களில் 500 கிலோவிற்கும் மேல் கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளன. ஆந்திராவிற்கே சென்று பலரை கைது செய்துள்ளது எஸ்.ஐ., கதிரேசன் தலைமையிலான தனிப்படை.
'ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்' அவசியம்
'மேகமலை பகுதி முழுவதையும் சோதனை செய்ய எஸ்.பி., சிவபிரசாத் ஸ்பெஷல் டீம் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
மேலும் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்துடன் இணைந்து போலீஸ், வனத்துறை ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் ஒன்றை ஏற்படுத்தி, மேகமலை பகுதி முழுவதையும் சோதனை செய்து கஞ்சா சாகுபடியை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.