/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குன்னுார் வைகை ஆற்றில் உறை கிணறுகள் துார்வாரப்படுமா: குடிநீர் வாரியம் பணிகளை துவக்க வேண்டும்
/
குன்னுார் வைகை ஆற்றில் உறை கிணறுகள் துார்வாரப்படுமா: குடிநீர் வாரியம் பணிகளை துவக்க வேண்டும்
குன்னுார் வைகை ஆற்றில் உறை கிணறுகள் துார்வாரப்படுமா: குடிநீர் வாரியம் பணிகளை துவக்க வேண்டும்
குன்னுார் வைகை ஆற்றில் உறை கிணறுகள் துார்வாரப்படுமா: குடிநீர் வாரியம் பணிகளை துவக்க வேண்டும்
ADDED : மே 02, 2024 05:45 AM
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 70 கிராமங்களுக்கு குன்னுார் ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து அதில் சுரக்கும் நீரை 'பம்ப்பிங்' செய்து குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குன்னுார் வைகை ஆற்றில் 4 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. வள்ளல் நதி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 3 உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக குன்னுார் வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லை. கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் உறை கிணறுகளில் நீர் சுரக்கும் திறன் குறைந்துள்ளது. சுரக்கும் குறைவான அளவு நீரை அனைத்து கிராமங்களுக்கும் விநியோகிக்க முடியாததால் பல கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றன.
ஊராட்சி சார்பில் உள்ளூரில் உள்ள பொதுக் கிணறுகள், 'போர்வெல்'களில் கிடைக்கும் நீரால் தண்ணீர் தேவையை ஊராட்சி நிர்வாகத்தினர் பூர்த்தி செய்கின்றனர். பொதுக் கிணறு, 'போர்வெல்'களில் கிடைக்கும் நீர் உப்புச்சுவை அதிகம் இருப்பதால் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனால் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் நீரை அனைத்து கிராமங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
துார்வாருவது அவசியம்
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: பாலக்கோம்பை, வள்ளல் நதி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மின்மோட்டார் பழுது, குழாய் உடைப்பு, உறை கிணறுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள வேண்டும். தற்போது உறை கிணறுகளில் நீர் சுரப்பது இல்லை. பல மாதங்களாக உறை கிணறுகள் பராமரிப்பு இன்றி மணல் மூடி உள்ளன.
இவற்றிலுள்ள மணல் படிமங்களை அகற்றி தூர்வாருவதால் நீர் சுரப்பு அதிகமாகும். இதனால் கூட்டுகுடிநீர் திட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு தேவையான குடிநீரை விநியோகம் செய்ய முடியும். உறைகிணறுகளை தூர்வார குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

