/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கப்படுமா! ரோடு விரிவாக்கத்திற்கு பின் நடவடிக்கை இல்லை
/
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கப்படுமா! ரோடு விரிவாக்கத்திற்கு பின் நடவடிக்கை இல்லை
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கப்படுமா! ரோடு விரிவாக்கத்திற்கு பின் நடவடிக்கை இல்லை
தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கப்படுமா! ரோடு விரிவாக்கத்திற்கு பின் நடவடிக்கை இல்லை
ADDED : ஜூலை 23, 2025 12:32 AM

கூடலுார்; தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்குப் பின் ரோட்டின் இரு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்து வளர்க்க வேண்டும் என தன்னார்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விரிவாக்கத்தின் போது வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு பதில் 10 மரங்களை நட வேண்டும் என்ற விதியும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
குமுளி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை 125 கி.மீ., தூரம் கொண்டதாகும். இதில் திண்டுக்கல்லில் இருந்து தேனி வரை எண்: 45 ஆகவும், தேனியில் இருந்து குமுளி வரை எண்: 220 ஆகவும் உள்ளது. இரு மாநில எல்லைப் பகுதியாக இருப்பதால் வாகனப் போக்குவரத்து அதிகம். அதனால் 2022ல் இருவழிச் சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டு 2023 பிப்ரவரியில் பணிகள் துவங்கின.
விரிவாக்கப் பணியின் போது இடையூறாக இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
அதில் அரசமரம், ஆலமரம், புளியமரம், இலவம் உள்ளிட்ட முக்கிய மரங்களும் ஆகும். நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையான மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. இதனால் மரங்களின் எண்ணிக்கை குறைந்து மழைப்பொழிவும் குறைந்ததால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டது. குளுமையாக இருந்த தேனி மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது.
வெட்டிய மரங்களுக்கு பதில் மரக்கன்றுகள் நட வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். வெட்டப்பட்ட ஒவ்வொரு மரங்களுக்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. மேலும் நடப்படும் மரக்கன்றுகளை முழுமையாக பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் பெயரளவில் சில இடங்களில் மட்டும் மரக்கன்றுகளை நடவு செய்த நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து நடவில்லை. நடவு செய்த மரக்கன்றுகளை பல இடங்களில் பராமரிக்கவில்லை.
இருவழிச்சாலையாக உள்ள தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ரோட்டின் இரு பகுதிகளிலும் தலா 25 அடிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டும் என தன்னார்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மரக்கன்றுகளை பராமரிக்க வேண்டும்
புதுராஜா, தலைவர், நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம், கூடலூர்:
தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் அதிகம் வளர்த்தால் மட்டுமே மீண்டும் குளுமையான மாவட்டத்தை பார்க்க முடியும். சில தன்னார்வ அமைப்புகள் நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். ஆனால் அதை தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும், அல்லது தன்னார்வலர்கள் நடப்பட்ட மரங்களையாவது பாதுகாக்க முன்வர வேண்டும், என்றார்.

