/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிர்வாக ஒருங்கிணைப்பு இன்றி மக்கள் அடிப்படை வசதிக்கு தவிப்பு கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் சுகாதார கேடால் நோய் பரவும் அவலம்
/
நிர்வாக ஒருங்கிணைப்பு இன்றி மக்கள் அடிப்படை வசதிக்கு தவிப்பு கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் சுகாதார கேடால் நோய் பரவும் அவலம்
நிர்வாக ஒருங்கிணைப்பு இன்றி மக்கள் அடிப்படை வசதிக்கு தவிப்பு கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் சுகாதார கேடால் நோய் பரவும் அவலம்
நிர்வாக ஒருங்கிணைப்பு இன்றி மக்கள் அடிப்படை வசதிக்கு தவிப்பு கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் சுகாதார கேடால் நோய் பரவும் அவலம்
ADDED : ஜன 20, 2024 05:45 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சியில் நிதி நெருக்கடி, ஒருங்கிணைப்பு இல்லாத நிர்வாகத்தால் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இந்த ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பாலக்கோம்பை கூட்டுக்குடி திட்டத்தில் குடிநீர் வினியோகம் வாரம் ஒரு நாள் வினியோகிக்கப்படுகிறது. எனவே, குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. பயன்பாடில்லாத பொதுக்கழிப்பறை, பராமரிப்பில்லாத வடிகால், ஊராட்சியில் குவியும் குப்பையால் சுகாதாரப் பாதிப்பு நிலவுகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து ஊராட்சியில் புகார் தெரிவித்தாலும், தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் ஆகியோர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பொதுமக்கள் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகமல் தவிப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். ஊராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
சுத்திகரிக்காத குடிநீர் சப்ளை
மயில்சாமி, கதிர்நரசிங்கபுரம் : பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நீர் சுத்திகரிப்பின்றி கலங்கலாக வருகிறது. இந்த நீருடன் போர்வெல் நீரையும் கலந்து வினியோகிக்கின்றனர். வாரம் ஒரு முறையாவது சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழியில்லை. பெண்களுக்கான பொது கழிப்பறை செயல்பாடின்றி மூடப்பட்டுள்ளது. பலரும் திறந்த வெளியை கழிப்பிடத்தை பயன்படுத்துகின்றனர். இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள சிற்றோடையை குப்பை கிடங்காக்கி விட்டனர். குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கூடுதல் பொதுக்கழிப்பறை கட்டவும், ஏற்கனவே உள்ள கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஊரு காலப்பன் கோயில் குளத்திற்கு வரும் நீர்வரத்து பாதையை அடைத்து விட்டனர். ஆண்டிபட்டி பகுதியில் அதிக மழை பெய்தும் நீர் வரத்தின்றி குளம் வரண்டுள்ளது.
கிணற்றை மூடி மாசுபடுத்திய நிலை
முத்துவேல்,கதிர்நரசிங்கபுரம் : நாகலாறு ஓடைக்கு செல்லும் பாதையில் உள்ள பொதுக் கிணற்றில் நீரை பயன்படுத்தாமல் கம்பி வேலியால் மூடி உள்ளனர். இப்பகுதியில் குவியும் குப்பை கிணற்றில்சேர்ந்து தண்ணீரை பாதிப்படைய செய்கிறது. கடந்த காலங்களில் இந்த கிணற்று நீர் ஊரின் அனைத்து பகுதிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. கிணற்றை சுத்தப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ஊராட்சியில் குவியும் குப்பையை சேர்த்து வைக்க கிடங்கு வசதி இல்லை. ஆங்காங்கே குப்பையை கொட்டி நீர் வரத்து ஓடையை மூடிவிட்டனர். மழை பெய்தாலும் ஓடை வழியாக நீர் செல்ல முடியாமல் குப்பையுடன் புதர் மண்டியுள்ளது.
ஊராட்சியில் சமுதாய கூட வசதி இல்லை. திறந்தவெளி கழிப்பிடங்களை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளும்நிலையில் கதிர்நரசிங்கபுரத்தில் ஊரை சுற்றி பல இடங்களும் திறந்த வெளி கழிப்பிடமாகவே உள்ளது. அடிப்படைத் தேவைகள் குறித்து தலைவர், ஊராட்சி செயலாளரிடம் தெரிவிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை இல்லை
குப்பை அகற்றததால் நோய்பரவும் அபாயம்
அம்மாவாசி,கதிர்நரசிங்கபுரம்: ஊராட்சியில் வடிகால் சுத்தம் செய்வதில்லை. அன்றாடம் சேரும் குப்பையை அகற்ற போதுமான பணியாளர்கள் இல்லை. பல மாதம் ஆகியும் குவியும் குப்பை அகற்றததால் கழிவு நீருடன் குப்பை சேரும் இடங்களில் கொசுத்தொல்லையால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கதிர்நரசிங்கபுரத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் ரோட்டை விவசாயிகள் பயன்படுத்தினர். பல ஆண்டுகளாக இந்த ரோடு பராமரிக்காமல் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டு புதர் மண்டியுள்ளதால் பயன்படுத்த முடியவில்லை. ஊர் காவலப்பன் கோயில் குளத்தில் நீர் தேங்கினால் விவசாயக் கிணறுகள் போர்வெல்களில் நீர் சுரப்பு கிடைக்கும். நீர் வரத்து பகுதியை சரி செய்து கோயில் குளத்தில் நீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதிய நிதி வசதி இல்லை
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சியில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற போதியநிதி ஆதாரம் இல்லை. பொதுக் கழிப்பறையை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கூடுதல் கழிப்பறை கட்டுவதற்கு போதுமான இட வசதி, நிதி இல்லை. பொதுக்கிணறு 25 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை.
கிணற்றில் பாதுகாப்பு மேல் மூடி போடப்பட்டுள்ளது. பொது இடங்களில் குவியும் குப்பையை அள்ளினாலும் மீண்டும் அதே இடத்தில் கொட்டி விடுகின்றனர். ஊராட்சியில் ஒரே துப்புரவு பணியாளர், இரு தூய்மை காவலர்களால் அனைத்து இடங்களிலும் தினமும் சுகாதார பணிசெய்ய முடியவில்லை. கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒதுக்கீடு அளவு ஊராட்சிக்கு போதுமானதாக இல்லை. போர்வெல் நீரை வைத்து பற்றாக்குறையை சரி செய்ய வேண்டி உள்ளது. ஊராட்சியில் துப்புரவு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது என்றனர்.