ADDED : அக் 20, 2024 01:44 AM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட தொப்பையாபுரத்தில் கனமழையால் பழைய தொகுப்பு வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் சின்னப்பொண்ணு 55, என்பவர் பலியானார்.
வருஷநாடு, மயிலாடும்பாறை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாபுரம் கிழக்குத்தெருவில் சின்னப்பொண்ணு என்பவர் வசித்து வந்தார். கணவனை இழந்த இவர் தனது பராமரிப்பு இல்லாத பழைய தொகுப்பு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பலத்த மழையால் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சின்னப்பொண்ணு பலியானார். கடமலைக்குண்டு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளை அகற்றி அவரது உடலை மீட்டனர். வருவாய்த்துறையினரும் விசாரிக்கின்றனர்.