/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உத்தமபாளையம் குடோனில் இருந்து 55 ரேஷன் கடைகள் போடிக்கு மாற்றம் சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
/
உத்தமபாளையம் குடோனில் இருந்து 55 ரேஷன் கடைகள் போடிக்கு மாற்றம் சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
உத்தமபாளையம் குடோனில் இருந்து 55 ரேஷன் கடைகள் போடிக்கு மாற்றம் சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
உத்தமபாளையம் குடோனில் இருந்து 55 ரேஷன் கடைகள் போடிக்கு மாற்றம் சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்
ADDED : ஜூன் 05, 2025 04:08 AM
உத்தமபாளையம்:ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருள்கள் மாத ஒதுக்கீடு செய்வதில் 55 கடைகளை உத்தமபாளையம் குடோனில் இருந்து போடிக்கு மாற்றம் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் இருந்து உத்தமபாளையம்,போடி தாலுகாக்களில் உள்ள 161 ரேஷன் கடைகளுக்கு மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவு பொருள்கள் அனுப்பப்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
1980ல் இருந்து 45 ஆண்டுகளாக இந்த பணி நடந்து வருகிறது. பொருள்களை லாரிகளில் ஏற்றி, இறக்க 80 சுமைதூக்கும் தொழிலாளர்கள் இப் பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 161 கடைகளில் இருந்து 55 ரேஷன் கடைகளை பிரித்து போடியில் உள்ள சிவில் சப்ளை குடோனுக்கு மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
குறிப்பாக சீப்பாலக்கோட்டை, காமாட்சிபுரம், எரசக்க நாயக்கனுார், ஓடைப்பட்டி, கோபால்நாயக்கன்பட்டி, மூர்த்திரநாயக்கன்பட்டி, அப்பிபட்டி, கன்னிசேர்வைபட்டி, சின்னமனூர், குச்சனூர், மேலச்சிந்தலச்சேரி, தே.சிந்தலச்சேரி உள்ளிட்ட சில கிராமங்கள் உத்தமபாளையத்திலிருந்து போடிக்கு மாற்றப்படுகிறது. இதனால் அத்தியாவசிய உணவு பொருள்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். பொருள்கள் லாரிகளில் கொண்டு செல்லவும், கொண்டு வரவும் 110 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.
எரிபொருள் செலவு, கால தாமதம் ஆகும். மேலும் போடியில் உள்ள குடோனுக்கு மாத வாடகை ரூ.76 ஆயிரம் என தகவல் வெளியாகி உள்ளது. உத்தமபாளையத்தில் மாத வாடகை ரூ.18 ஆயிரம் மட்டுமே . மேலும் இதை நம்பியுள்ள 80 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கலெக்டரிடம் பேசியும் பலன் இல்லை.
உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் கேட்டபோது, '55 கடைகளை போடிக்கு மாற்ற உள்ளதாக தகவல் உள்ளது. ஆனால் முறைப்படி உத்தரவு இன்னமும் வரவில்லை,' என்றனர். தேனியில் உள்ள துணை மேலாளர் கூறுகையில், 'குடோனுக்கு பெரிய இடம் தேவைப்படுகிறது. எனவே கடைகள் பிரிக்கப்படுகிறது.
கலெக்டர் உத்தரவில் இன்று முதல் 55 கடைகள் போடிக்கு மாற்றப்படுகிறது,' என்றார்.
கடைகள் பிரிப்பதை கண்டித்து நேற்று காலை உத்தமபாளையம் நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லும் பணி முடங்கியுள்ளது.