ADDED : பிப் 10, 2024 05:53 AM

தேனி: தேனி பொம்மையக்கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயில் அருகே, டூவீலரில் லாரியை முந்திச்செல்ல முயன்ற போது லாரியில் அடிபட்டு மோகன்பாபு 35, சம்பவ இடத்திலேயே பலியானார்.
அல்லிநகரம் வி.எம்.சாவடி தெருவை சேர்ந்தவர் மோகன்பாபு 35, இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள கார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்தார். நேற்று காலை இவர் பொம்மையக் கவுண்டன்பட்டியில் உள்ள அவரது நண்பர் கண்ணனை, டூவீலரில் பின்னால் ஏற்றிக்கொண்டு, தேனி பெரியகுளம் ரோட்டில் சாலை பிள்ளையார் கோயில் வாசல் அருகே சென்றார். அப்போது டூவீலருக்கு முன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்குபுரம் 2வது தெருவை சேர்ந்த டிரைவர் ஜெயபாண்டி 50, ஓட்டிச்சென்ற லாரி சென்றது. லாரியை முந்திச் செல்ல நினைத்து இடதுபுறமாக சென்ற டூவீலர் மீது, லாரி மோதி விபத்து நடந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மோகன்பாபு உயிரிழந்தார். டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த கண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அல்லிநகரம் எஸ்.ஐ., செந்தில்குமார், பிரேதத்தை கைப்பற்றி, 108 ஆம்புலன்சில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.