/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையப்பர் கோயிலில் 507வது தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்
/
நெல்லையப்பர் கோயிலில் 507வது தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்
நெல்லையப்பர் கோயிலில் 507வது தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்
நெல்லையப்பர் கோயிலில் 507வது தேரோட்டம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசம்
ADDED : ஜூலை 13, 2011 01:40 AM
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலின் 507வது ஆனித்தேரோட்டம் நேற்று
கோலாகலமாக நடந்தது. பக்தர்களின் வெள்ளத்தில் ஆடி,அசைந்து வந்த தேரை
கண்டதும் பக்தர்கள் பரவசமடைந்தனர்.திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாக
அமைந்த காந்திமதியம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்
தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு
ஆனித்தேரோட்டம் கடந்த 4ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து 10 நாள்
தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள்,
நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் நேற்று நடந்தது.
இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுவாமி கங்காளநாதர் தங்கச்
சப்பரத்தில் வீதியுலாவும், இரவு சுவாமிஅம்பாளுக்கு சிறப்பு அபிஷேக
ஆராதனைகளும் நடந்தது.இரவு தேர் கடாட்சம் வீதியுலா,சுவாமி தங்க கைலாச பர்வத
வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதியுலா நடந்தது.தொடர்ந்து
அதிகாலை 4.21 மணிக்கு மேல் 4.51 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேரில்
எழுந்தருளல் நடந்தது.
அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர் தேர் முதலில்
வடம் பிடித்து இழுக்கப்பட்டது.507வது தேரோட்டம்:>காலையில் ஓதுவா
மூர்த்திகள் வைத்தியலிங்கதேசிகர், சங்கரலிங்க ஓதுவார் திருநெல்வேலி
பதிப்பகம் பாட, 507வது தேரோட்டம் காலை 8 மணிக்கு நடந்தது. டிஆர்ஓ.,ரமண
சரஸ்வதி, எம்எல்ஏ.,நயினார் நாகேந்திரன், எம்பி.,ராமசுப்பு ஆகியோர்
தலைமைவகித்து தேர் வடம் பிடித்து இழுத்தனர்.இதைத்தொடர்ந்து 'நெல்லையப்பா,
மகாதேவா, சம்போ மகாதேவா' வேணுவனநாதா போன்ற பக்தி கோஷங்களுடன் பக்தர்கள்
வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேருக்கு முன்பாக கோயில் யானை காந்திமதி
சிறப்பு அலங்காரத்தில் கம்பீரமாக நடந்துவந்தது.
நிலையம் வந்த தேர்காலை 8 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. 9 மணிக்கு
வாகையடி முக்கிலும், 9.40 மணிக்கு சந்திப்பிள்ளையார் கோயில் முக்கிற்கும்
விரைவாக வந்தடைந்தது. 11.30 மணிக்கு லாலாசத்திர முக்கில் இருந்து
திரும்பியது. மதியம் 1 மணிக்கு போத்தீஸ் முக்கில் திரும்பியதும் அங்கு தேர்
நிறுத்தப்பட்டது. 5 மணிநேரத்தில் நிலையத்தின் அருகில் கொண்டுவிடப்பட்டு,
பின்னர் அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.சிறிது இடைவேளைக்கு பின், மாலை 3.45
மணிக்கு மீண்டும் தேர் இழுக்கப்பட்டு 4.30 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.
தொடர்ந்து அம்பாள் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் நிலையம் வந்தடைந்தது.
தேரோட்டத்திற்கு பின் சுவாமி,அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு
சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து சுவாமிஅம்பாள் சப்தாவர்ண பல்லக்கில்
வீதியுலாவும் நடந்தது.பலத்த பாதுகாப்பு:>ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு
நான்கு ரதவீதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ தலைமையில் துணை
கமிஷனர்கள் மார்ஸ்டன் லியோ, ஜெயபாலன் முன்னிலையில் பலத்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருட்டு சம்பவங்களை தடுக்க நான்கு ரதவீதிகளிலும்
சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிசிடிவி மூலம் கட்டுப்பாட்டு அறையில்
இருந்தபடியே போலீசார் கண்காணித்தனர். மேலும் கோயிலின் உள்பிரகாரங்களிலும்
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கும் ரகசிய கேமராக்கள்
பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார்
'மப்டி' ரதவீதிகளில் சுற்றிவந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்தும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.தேரோட்ட நிகழ்ச்சியில்,
மாநகராட்சி கமிஷனர் சுப்பையன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்
புகழேந்திரன், ஆர்டிஓ.,ராஜகிருபாகரன், சங்கரானந்தா சுவாமிகள், ஆரெம்கேவி
விஸ்வநாத், கோடீஸ்வரன் மணி, நெல்லை கல்சுரல் அகாடமி காசிவிஸ்வநாதன்,
சொனா.வெங்கடாச்சலம், குணசேகரன், கவுன்சிலர் நமச்சிவாயம், அதிமுக
பிரமுகர்கள் சுதா பரமசிவம், பரணி சங்கரலிங்கம், தச்சை ராஜா உட்பட
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை செயல் அலுவலர்
கசம்காத்த பெருமாள்,தக்கார் பொன் சுவாமிநாதன், கோயில் பணியாளர்கள் மற்றும்
நெல்லை கல்சுரல் அகடமி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
மக்கள் வெள்ளத்தில் திணறிய நெல்லை!தேரோட்டத் திருவிழா துளிகள்!
* தேரோட்டத்தின் போது வளைவுகளில் தேரை நிறுத்தவும், தேரின் வேகத்தை
கட்டுப்படுத்தவும்,ரோடு சேதமடைவதை தடுக்கவும் மரக்கட்டளைகளால் செய்யப்பட்ட
தடிபோடப்பட்டன.* தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோயில் வசந்த
மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் 4 ரதவீதிகளிலும் பல்வேறு
அமைப்புகள் சார்பில் நீர்மோர், தண்ணீர், சாப்பாடு பொட்டலங்கள்
வழங்கப்பட்டன.* தேர் வடம் பிடித்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பக்தர்
பேரவையினர் குடங்களில் குடிநீர் வழங்கினர்.* தேரோட்டத்தை காண நெல்லை
மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
நெல்லைக்கு வந்தனர். இதனால் நெல்லை டவுன் ரதவீதிகள் மற்றும்
சுற்றுப்புறங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.* மாநகர போலீஸ் கமிஷனர்
வரதராஜூ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* திருட்டு
மற்றும் பெண்களை கேலி செய்தல் சம்பவங்களை தடுக்க தேரோட்டம் முழுவதையும்
சுழலும் கேமராக்களும், மப்டி உடையிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.*
தேரோட்டத்திற்கு வந்த பக்தர்கள் பேப்பர்களையும், சாப்பாடு பொட்டலங்களின்
இலைகள், பிளாஸ்டிக் பேப்பர், மோர் குடித்த டம்ளர்களை ஆங்காங்கே
போட்டுவிட்டு சென்றனர். அவற்றை அப்புறப்படுத்தி சுகாதாரமாக வைக்கும்
பணியில் மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் உத்தரவுப்படி மாநகராட்சி ஊழியர்கள்
சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.* நெல்லை,பாளை.தாலுகாக்களில் உள்ளூர்
விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் பள்ளிக்குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள்
தேரோட்டத்தை பார்க்க ஆர்வமாக வந்திருந்தனர்.* நெல்லை டவுன் 4 ரதவீதிகளில்
கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.* ரதவீதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக
நிறுவனங்களின் மாடிகளில் இருந்து ஆடி அசைந்து தேர் வருவதை பார்த்து
மகிழ்ந்தனர்.* மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படுவதை தடுக்க ரதவீதிகளில்
மின்சப்ளை தடை செய்யப்பட்டிருந்தது.* ஆனித் திருவிழாவுக்காக டவுன்
ரதவீதிகள் முழுவதும் தோரணங்களும், வண்ண விளக்குகளும் போடப்பட்டிருந்தன.
* ரதவீதிகளில் 'திடீர்' கடைகள் அதிக அளவில் காணப்பட்டன. வெளியூரில் இருந்து
வந்தவர்கள்,உள்ளூர் மக்கள் முற்றுகையால் வியாபாரம் களை கட்டியிருந்தது.
* நெல்லை கல்சுரல் அகாடமி சார்பில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியன்
தேர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரனிடம் புதிய
திரைச்சீலைகள் வழங்கப்பட்டன.* கடந்த சில நாட்களுக்கு முன் நெல்லை வந்த
இங்கிலாந்து நாட்டினர் 25 பேர் தேரோட்டத்தையும், மக்கள் வெள்ளத்தையும்
கண்டு மலைத்தனர். அனைவரும் தங்கள் கேமராக்களில் தேரோட்ட நிகழ்ச்சியை
'கிளிக்' செய்தனர்.* சுவாமி தேர் 450 டன் எடை கொண்டது. 35 அடி உயரமும், 28
அடி அகலமும் கொண்ட இந்த தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்ற
பெயர் பெற்றது.