/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திராவிடத்தின் பெயரால் தமிழர் அடையாளத்தை அழிக்க முயற்சி
/
திராவிடத்தின் பெயரால் தமிழர் அடையாளத்தை அழிக்க முயற்சி
திராவிடத்தின் பெயரால் தமிழர் அடையாளத்தை அழிக்க முயற்சி
திராவிடத்தின் பெயரால் தமிழர் அடையாளத்தை அழிக்க முயற்சி
ADDED : ஏப் 16, 2024 06:35 AM

திருநெல்வேலி : திராவிடத்தின் பெயரால் தமிழர் அடையாளத்தையும் பண்பாட்டையும் அழிக்க பார்க்கிறார்கள் என திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நடந்த பா.ஜ., பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தி.மு.க., மீது குற்றம் சாட்டினார்.
அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். விருதுநகர் ராதிகா, திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பொன் ராதாகிருஷ்ணன், தென்காசி ஜான்பாண்டியன், துாத்துக்குடி த.மா.கா., வேட்பாளர் விஜயசீலன், விளவங்கோடு சட்டசபை தொகுதி வேட்பாளர் நந்தினியை ஆதரித்து மோடி பேசினார்.
அவர் பேசியதாவது: நேற்று தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடினீர்கள். தமிழ்ப்புத்தாண்டில் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறோம், தமிழ்நாட்டிற்காக பல முன்னேற்றம் தரும் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
ஒரு கோடியே 85 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம். 3 கோடி வீடுகள், முத்ரா கடன் திட்டம், மீன் வளர்ப்பு, பாசிகள் முத்து வளர்ப்புதிட்டம் முதலிய திட்டங்கள் உள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் இயக்கியுள்ளோம் வருங்காலத்தில் புல்லட் ரயில் விடவும் திட்டம் உள்ளது.
10 ஆண்டுகளில் தமிழக தாய்மார்கள் சகோதரர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள். தமிழ் மொழியை நேசிப்பவர்கள் எல்லோரும் பா.ஜ.,வை நேசிப்பீர்கள். தமிழகத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் கொண்டுவர முயற்சிப்போம். திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் உலக அளவில் ஏற்படுத்தப்படும். தி.மு.க., - காங்.. கூட்டணி வெறுப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்துபவர்கள். ஜல்லிக்கட்டை எப்படி எதிர்த்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
திராவிடத்தின் பெயரால் தமிழக அடையாளத்தையும் பண்பாட்டையும் அழிக்க பார்க்கின்றனர். தமிழகம் என்றாலே வீரமும் தேசப்பற்றும் நினைவுக்கு வருகிறது. மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரமங்கை வேலு நாச்சியார் போன்றவர்கள் துணிச்சலாக அன்னிய ஆட்சியை எதிர்த்து போராடினர்.
முத்துராமலிங்க தேவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் வீரமிக்கவர்கள் ஏராளமானவர்கள் சுதந்திரத்துக்காக போராடினர். பா.ஜ., தமிழகத்தையும் தமிழ் மொழியையும் எப்போதும் நேசிக்கும் கட்சி. சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ.சிதம்பரனாரை நினைத்துப் பார்க்கிறோம். அவர் தந்த உத்வேகத்தால் பாதுகாப்புத் துறையில் தற்போது தன்னிறைவை பெற்றுள்ளோம்.
காமராஜர் மாபெரும் தலைவர். தேசப்பற்றும் நேர்மையும் கொண்ட தலைவர். அவரைப் பின்பற்றி பா.ஜ., நேர்மையாகவும் துாய்மையாகவும் அரசியல் செய்கிறது. காங்கிரசும் தி.மு.க.,வும் அவரை அவமதிப்பு செய்கின்றன. எம்.ஜி.ஆர்., எனும் மாபெரும் தலைவரின் கனவுகளை தமிழகத்தில் முன்னெடுத்து செல்கிறோம். எம்.ஜி.ஆரை தி.மு.க., தொடர்ந்து அவமதித்து வருகிறது.
ஜெயலலிதாவை சட்டசபையில் நடத்தியதை நாம் மறக்க முடியாது.
தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நாம் நிறைவேற்றி உள்ளோம். நான் நரேந்திரன். உங்களிடம் இருந்து வேறுபட்டவன் அல்ல. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தேச விரோத செயல்களை செய்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் உயிர்நாடியான கச்சத்தீவை துண்டித்து வேறு நாட்டுக்கு வழங்கினர். ரகசியமாக திரை மறைவில் நடந்த இந்த வரலாற்று பிழை மன்னிக்க முடியாதது. இதை ஆவணங்களோடு பா.ஜ., அண்மையில் அம்பலப்படுத்தியது. இதனால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் தற்போது எங்கே செல்கிறது... போதையை நோக்கி செல்கிறது. குடும்ப அரசியல் செய்பவர்கள் போதையை ஊக்குவிக்கின்றனர். குழந்தைகள் போதை என்னும் நரகத்திற்கு தள்ளப்படுகின்றனர். போதை எனும் விஷம் தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது.
பல கோடி ரூபாயில் போதை விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போதை வணிகத்தை எதிர்த்து போராடுவேன். இந்த நாட்டில் போதை இல்லாமல் செய்வேன். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போதை இல்லாத சமூகத்திற்கு பா.ஜ., நாட்டை அழைத்துச் செல்லும். எனவே பா.ஜ.,வை ஆதரியுங்கள். இந்த பிரசார கூட்டம் தான் நான் உங்களை சந்திக்கும் கடைசி பிரசார கூட்டமாகும்.
ஒரே ஒருமுறை பா.ஜ.,விற்கு ஓட்டளியுங்கள். நான் உங்களை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய இலக்கு 2047 ஆகும். பா.ஜ.,வுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவை பார்த்து தி.மு.க.,விற்கு பயம் வந்துவிட்டது. பா.ஜ., நிர்வாகிகள் பயப்படாமல் பணியாற்றுங்கள். மொத்த தமிழ்நாடும் உங்களோடு இருக்கிறது. நானும் உங்களோடு இருக்கிறேன். இங்கு போட்டியிடுபவர்கள் உங்களுடைய குரலை டில்லியில் ஒலிப்பர். இவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்கள் ஆதரவை டார்ச் அடித்து காட்டுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அலைபேசி மூலம், டார்ச் லைட் அடித்து மோடி மோடி என குரல் எழுப்பினர்.

