/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையில் கொலையான வாலிபர் உடல் 7 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு; இறுதி ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு
/
நெல்லையில் கொலையான வாலிபர் உடல் 7 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு; இறுதி ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு
நெல்லையில் கொலையான வாலிபர் உடல் 7 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு; இறுதி ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு
நெல்லையில் கொலையான வாலிபர் உடல் 7 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு; இறுதி ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 28, 2024 12:14 AM

திருநெல்வேலி : திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட வாலிபர் தீபக் ராஜா 30, உடல் 7 நாட்களுக்கு பிறகு நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலையில் 4 மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளத்தை சேர்ந்த தீபக்ராஜா பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன. மே 20 மதியம் கே.டி.சி.நகர் நான்கு வழிச்சாலை பாலம் அருகே வைர மாளிகை ஓட்டல் முன்பாக 7 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், முன்னீர்பள்ளம் ஐயப்பன், முத்துசரவணன், திருச்சியில் தலைமறைவாக இருந்த நவீன், நாங்குநேரி லெப்ட் முருகன், மேலச்செவல் லட்சுமிகாந்தன் என்ற கருப்பா, சேரன்மகாதேவி சரவணன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். போலீசிடம் இருந்து தப்ப முயன்ற நவீன், லெப்ட் முருகனுக்கு காயங்கள் ஏற்பட்டன. காயமுற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சுரேஷ், பவித்ரன், முத்து உள்ளிட்ட ஐந்து பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
உடல் ஒப்படைப்பு
தீபக் ராஜா கொலையில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை பெற மாட்டோம் என குடும்பத்தினர் தெரிவித்தனர். நவீன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் உடலை குடும்பத்தினர் நேற்று காலை 10:15 மணிக்கு பெற்றனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சீனிவாச நகர், ராஜகோபாலபுரம், ரெட்டியார்பட்டி, பொன்னாக்குடி வழியாக கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் முன்னும் பின்னும் 300க்கும் மேற்பட்ட டூவீலர்கள், கார்களில் தீபக் ராஜா நண்பர்கள், உறவினர்கள் சென்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில இடங்களில் ஒரு வழிப்பாதை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
பொன்னாக்குடி உள்ளிட்ட சில இடங்களில் போலீசாருக்கும், உடன் சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகைகுளத்தில் இடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், கமிஷனர் மூர்த்தி, எஸ்.பி., சிலம்பரசன், துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். தமிழர் விடுதலை களம் ராஜ்குமார், லெனின் கென்னடி உள்ளிட்ட தேவேந்திரகுல வேளாளர் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.