/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
காங்., தலைவர் ஜெயக்குமார் இறப்பில் திருப்பம்
/
காங்., தலைவர் ஜெயக்குமார் இறப்பில் திருப்பம்
ADDED : மே 09, 2024 02:43 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தீயில் கருகி இறந்த சம்பவத்தில் கூலிப்படையினர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர். அவர் எழுதியதாக குறிப்பிடப்படும் கடிதங்களில் கையெழுத்து மாறி இருப்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் 58. திசையன்விளை அருகே கரைசுத்து புதூரை சேர்ந்தவர்.
மே 2ம் தேதி இரவில் வீட்டிலிருந்து காரில் கிளம்பிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் உவரி போலீசில் தந்தையை காணவில்லை என புகார் அளித்தார். ஜெயக்குமார் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் என சந்தேகிக்கும் பெயர்களுடன் எழுதிய கடிதங்களை கொடுத்தார்.
ஜெயக்குமார் எரிந்த நிலையில் கரைசுத்துபுதூரில் அவர்களின் தோட்டத்திலேயே இறந்து கிடந்தார்.
அவர் உடலை சுற்றி இரும்பு கம்பிகள் சுற்றப்பட்டு இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஜெயக்குமாருக்கு நெருக்கமானவர்களே இதனை செய்தார்களா அல்லது வெளியிடங்களில் வந்து கூலிப்படையினர் இதை செய்தார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.
கையெழுத்து குழப்பம்
ஜெயக்குமார் காணாமல் போவதற்கு முன்பாக எஸ்.பி.க்கு எழுதியதாக இரண்டு கடிதங்களை புகாரின் போது அவரது மகன் போலீசில் கொடுத்தார். அது அவரது கையெழுத்து தானா என சந்தேகம் இருந்தது. இதனிடையே ஜெயக்குமார் கடந்த மார்ச் 7ல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக வள்ளியூர் ஸ்டேட் பாங்க் கிளை மேலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கையெழுத்து தான் ஜெயக்குமாரின் கையெழுத்து எனவும் தற்போது போலீசுக்கு தரப்பட்டுள்ள கடிதங்கள் அவரது கையெழுத்து இல்லை எனவும் கூறப்படுகிறது. எனவே இந்த கடிதம் அவரது லெட்டர் பேடில் போலியாக தயாரிக்கப்பட்டதா எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.
மே 2 இரவில் அவர் அலைபேசியை கடைசியாக பயன்படுத்தியது திருநெல்வேலி மாவட்டத்தின் குட்டம் கிராமம் என தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவரது அலைபேசி சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. எனவே குட்டத்திற்கு எதற்காக சென்றிருந்தார் என்ற கேள்விகள் எழுகின்றன. குட்டத்தைச் சேர்ந்த யாருடனாவது அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.