/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாஞ்சோலை வழக்கு விசாரணை மாற்றம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மாஞ்சோலை வழக்கு விசாரணை மாற்றம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை வழக்கு விசாரணை மாற்றம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
மாஞ்சோலை வழக்கு விசாரணை மாற்றம்; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 30, 2024 06:22 AM

மதுரை; திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கோரிய வழக்கின் விசாரணையை வனத்துறை விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதிகள் அமர்விற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழக அரசிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்(பி.பி.டி.சி.,) நிறுவனம் நிர்வகிக்கிறது. 8374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனமாக 2018 ல் அரசு அறிவித்தது. அது களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் வருகிறது. தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை பி.பி.டி.சி.,நிறுவனம் அறிவித்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் தரப்பில்,'மறுவாழ்விற்காக உதவிகள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் தேயிலை தோட்டக் கழகம் (டான்டீ) நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்,' என மனு செய்யப்பட்டது.
மேலும் சிலர்,'விருப்ப ஓய்வு திட்டத்தில் தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு நிலம், பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். தோட்டத்தை வணிக நோக்கில் பொது அல்லது தனியார் துறையிடம் ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும்,' என மனு செய்தனர்.
ஏற்கனவே விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு: டான்டீ நிறுவனம் நஷ்டத்தில் செயல்படுகிறது. அது மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த வாய்ப்பில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை வணிக நோக்கில் பயன்படுத்த முடியாது.
மாஞ்சோலையில் பணியாற்றிய 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை, அந்நிறுவனம் அறிவித்தது. செப்.,க்குள் ஓய்வு பெறவுள்ள தொழிலாளர்களை தவிர்த்து, 536 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் குடியேற விரும்புவோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதோடு, கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படும். தொழிலாளர்களுக்கு சுய தொழில் துவங்க கடன், மானியம், வட்டி சலுகை வழங்கப்படும். இவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தது.
நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: இவ்வழக்கின் விசாரணை வனத்துறை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்விற்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.