/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு புகையால் மக்கள் அவதி
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு புகையால் மக்கள் அவதி
அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு புகையால் மக்கள் அவதி
அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு புகையால் மக்கள் அவதி
ADDED : பிப் 27, 2025 01:44 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால், சுற்றுப்புற மக்கள், நோயாளிகள் பாதிப்படைந்தனர்.
இங்கு பழைய கட்டட வளாகத்தில் நர்சிங் மையம் பின்புறம், புற்றுநோய் மையம் அருகே, ரத்த மாதிரி பிளாஸ்டிக் கவர்கள், பயன்படுத்திய மருத்துவ சாதனங்கள், காலாவதியான மாத்திரைகள் உள்ளிட்ட கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால் வெளியான புகை எம்.ஜி.ஆர் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவி, மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் டீன் ரேவதியிடம் புகார் தெரிவித்தனர்.
டீன் கூறியதாவது: மருத்துவமனையில் தினமும் 350 கிலோ மருத்துவ கழிவுகள் உருவாகின்றன. அதனை அசெப்டிக் எனும் தனியார் நிறுவனத்தினர் எடுத்துச் செல்வர். மாநகராட்சி ஊழியர்கள் பொதுக்கழிவுகளை அகற்றுவர். ஆனால் ஒரு வாரமாக அவர்கள் குப்பை அள்ளிச் செல்ல வரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை நினைவு படுத்தியும் வரவில்லை. இதனால் கழிவுகள் அதிகமாக தேங்கி, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனையின் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ''என்றார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சுகபத்ரா கூறியதாவது:
மருத்துவக் கழிவுகள் விதிமுறைகளின்படி அகற்றப்பட வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் பொதுக்கழிவை தான் அகற்றுவர். மருத்துவ கழிவுகள் கலந்து இருந்ததால் அவற்றை அகற்றவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது ''என்றார்.
சமீபத்தில், மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, கழிவுகளை முறையாக அகற்றாமல் தீ வைத்து எரித்ததால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனையிலேயே கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை கேள்விக்குறியாக்கிஉள்ளது.