ADDED : மே 17, 2024 01:15 AM
திருநெல்வேலி:ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் நெல்லையில் 15 நாட்கள் பண்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மூலமாக நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தியாக உள்ளம், அர்ப்பணிப்புணர்வு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடல், மனம், ஆன்மா அனைத்திலும் ஒருங்கே வளர்ச்சி பெற்ற முதல் தரமான மனிதர்களை உருவாக்கும் உன்னத நோக்கத்தோடு நெல்லை கரையிருப்பு அமிர்தா வித்யாலயா பள்ளியில் கடந்த ௧ம் தேதி முதல் ௧௫ நாள் இளைஞர்களுக்கான
பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில் தென் தமிழகம் முழுவதும் இருந்து ௪௦௫ பேர் கலந்து கொண்டனர். தற்காப்புக் கலை, யோகாசனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளும், ஆளுமைத்திறன், நல்லொழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை வளர்க்கும் பண்புப்பதிவு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
பயிற்சி முகாம் நிறைவு விழாவிற்கு நெல்லை ரத்தினம் ஆஸ்பத்திரி மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் ராஜேந்திரரத்னம் தலைமை வகித்தார். ஸ்ரீ விஷ்ணுப்பிரியா ஆஸ்பத்திரி டாக்டர் ராமகிருஷ்ணன், ராஜா குடியிருப்பு நாட்டாண்மை கணபதிசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். சிருங்கேரி மடம் முத்ராதிகாரி ஹரி ராஜசேகர வாத்யார் ஆசியுரை ஆற்றினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார். வரவேற்புக்குழு தலைவர் பாலபாக்யா குரூப் சேர்மன் ஆறுமுகப்பாண்டியன், தொழிலாளர் முகாம் தலைவர் மங்கேஸ்வரன், மாணவர் முகாம் தலைவர் சிவலிங்கம், கன்னியாகுமரி கோட்டத் தலைவர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
