/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஹிந்தியை ஒழிக்கவே நேரமில்லை; இதையெல்லாம் கவனிக்க ஏது நேரம்!
/
ஹிந்தியை ஒழிக்கவே நேரமில்லை; இதையெல்லாம் கவனிக்க ஏது நேரம்!
ஹிந்தியை ஒழிக்கவே நேரமில்லை; இதையெல்லாம் கவனிக்க ஏது நேரம்!
ஹிந்தியை ஒழிக்கவே நேரமில்லை; இதையெல்லாம் கவனிக்க ஏது நேரம்!
ADDED : மார் 05, 2025 11:34 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய கட்டடம் பயன்பாடு இன்றி வீணாக புதர் மண்டி கிடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில் 2 நாள் நடக்கும் ஆட்சி மொழி கருத்தரங்கை இந்த மையத்தில் நடத்தலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
திருநெல்வேலியில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நிகழ்வுகள் நடத்துவதற்காக என்.ஜி.ஓ.காலனி, உழுவைச் சாலையில் தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 50 சென்ட் நிலப்பரப்பில் அமைந்த இந்த கட்டடம், தரைத்தளத்தில் 5000 சதுர அடி, முதல் மாடியில் 5000 சதுரஅடி என மொத்தம் 10,000 சதுரஅடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதால், இது தமிழ் வளர்ச்சி துறை மட்டுமின்றி, தமிழ் இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் ஏற்றதாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த மையம் செயல்பாடின்றி உள்ளது. பண்பாட்டு மையத்தின் தலைவராக மாவட்ட கலெக்டர், செயலாளராக தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் உள்ளனர்.
இணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் போன்ற பலர் நிர்வாகத்தில் இருந்தாலும், மையம் தற்போது பயன்பாடு இன்றி கிடக்கிறது. தற்போது, தமிழக அரசு சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்குகள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய நிகழ்வுகளை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில் நடத்தினால், கட்டடம் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். மேலும், நூல் வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகளுக்காக இந்த மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் 2 நாள் நடக்கும் ஆட்சி மொழி கருத்தரங்கை இந்த மையத்தில் நடத்தலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.