/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கொரோனா காலத்தில் 2 கோடியே 43 லட்சம் கையாடல்
/
கொரோனா காலத்தில் 2 கோடியே 43 லட்சம் கையாடல்
ADDED : பிப் 01, 2024 02:26 AM

திருநெல்வேலி:சஸ்பெண்ட் ஆன தொழில் மைய பொதுமேலாளர் கொரோனா காலத்தில் தொழில் முனைவோர் பெயரில் அரசு மானிய தொகை ரூ 2 கோடியே 43 லட்சத்து 75 ஆயிரத்தை கையாடல் செய்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் ஓ.முருகேஷ் 50. 2019--2021 ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். அப்போது இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்தது.
பின்னர் அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மைய மேலாளராக பணியாற்றினார். 2022 மே மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்னமும் பணியில் சேரவில்லை. திருநெல்வேலி சாந்திநகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த அக்., 5ல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின்ஞானசிங் தலைமையில் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
முருகேஷ் 2020-- 21 கொரோனா காலகட்டத்தில் நீட்ஸ் எனும் மானியத்தில் கடன் வழங்கும் திட்டத்தில் 5 நபர்களின் பெயரில் வாகன கடன் பெறுவதாக அவரே விண்ணப்பங்கள் தயார் செய்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 48 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை அரசிடம் இருந்து பெற்றார். பின்னர் அந்த 5 பேரிடமும் பேசி அந்த தொகை தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளதாக கூறி பணத்தை அவரது வங்கி கணக்கு மற்றும் மனைவி வங்கி கணக்குகளில் திரும்ப பெற்றுக் கொண்டார். இதன் மூலம் 2 கோடியே 43 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முருகேஷ் தொழில் மைய அதிகாரியாக இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக கே.டி.சி. நகர் பகுதியில் அவர் கட்டியுள்ள பிரம்மாண்டமான வணிக வளாகத்தின் கட்டுமான பணி கண்காணிப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களிடமிருந்து ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று அவரே போலியான விண்ணப்பம் தயாரித்து இளைஞர்கள் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்து பின்னர் மோசடியாக திரும்ப பெற்றுள்ளார். 2020 -- 21ல் கொரோனா காலகட்டத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடி தற்போது தான் வெளியே தெரிய வந்துள்ளது. முருகேஷ் தற்போதும் சஸ்பெண்டில் உள்ளார்.
அவர் பணிபுரிந்த காலத்தில் திருநெல்வேலியில் கே.டி.சி. நகர் உட்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான மதிப்பில் கட்டியுள்ள பல்வேறு வணிக வளாகங்களுக்கு சீல் வைத்து அரசு அவற்றின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.