/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாஞ்சோலையில் மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த கோர்ட் அறிவுறுத்தல்
/
மாஞ்சோலையில் மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த கோர்ட் அறிவுறுத்தல்
மாஞ்சோலையில் மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த கோர்ட் அறிவுறுத்தல்
மாஞ்சோலையில் மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த கோர்ட் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 02:59 AM
'திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட மாஞ்சோலையில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரத்தில், விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடக்கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி உள்ளிட்டோர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'மாஞ்சோலை தேயிலை தோட்டப்பகுதி, புலிகள் நடமாடும் பகுதியாக இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது. அப்படி இருக்கும் போது, அங்கு மக்கள் வசிக்க எப்படி அனுமதிக்க முடியும்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாஞ்சோலை தொழிலாளர்களின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், 247 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன; அவற்றில், 190க்கும் அதிகமான நபர்களுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ளவர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் பட்சத்தில், உடனடியாக அவர்களுக்கும் முழுமையான மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்படும்' என, உறுதி அளித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'அங்கு வசிக்கும் தொழிலாளர்கள், மூன்று தலைமுறைக்கும் மேலாக அப்பகுதியிலேயே வசிப்பவர்களாக உள்ளனர்.
அவர்களை திடீரென வேறு இடத்திற்கு மாறும்படி கூறினால், அது, அவர்களால் இயலாத காரியம். மேலும், ஏற்கனவே வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்திற்கான வாழ்வாதாரம், குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பிற அடிப்படை விவகாரங்களை கருத்தில் கொண்டு, இதுவரை அரசு உரிய தகவல்களை தெரிவிக்கவில்லை. இன்னும் பலருக்கு வீடுகள் கூட ஒதுக்கப்படவில்லை.
எனவே, அனைத்து மறுவாழ்வு திட்டங்களும், இத்தனை நாட்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற காலவரம்பை தமிழக அரசுக்கு நிர்ணயிக்க வேண்டும்'என, கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'நிவாரண நடவடிக்கை அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. மாஞ்சோலை பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ள நிலையில், அங்கு தங்கியுள்ள, 84 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றார்.
இரு தரப்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் இப்போதைக்கு பிறப்பிக்க முடியாது. இங்குள்ள மக்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் மறுவாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தலாம்' என அறிவுறுத்தல் வழங்கி,விசாரணையை ஒத்திவைத்தனர்.
'ஒருவேளை, தமிழக அரசு வீடுகள் கட்டித்தருவது போன்றவற்றில் தாமதம் செய்தால், உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம்' என்றும், மனுதாரருக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
- டில்லி சிறப்பு நிருபர் -