/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நீயும் டிகிரி இல்லை ...நானும் டிகிரி இல்லை: மேயரை பார்த்து பேசிய தி.மு.க., கவுன்சிலர்
/
நீயும் டிகிரி இல்லை ...நானும் டிகிரி இல்லை: மேயரை பார்த்து பேசிய தி.மு.க., கவுன்சிலர்
நீயும் டிகிரி இல்லை ...நானும் டிகிரி இல்லை: மேயரை பார்த்து பேசிய தி.மு.க., கவுன்சிலர்
நீயும் டிகிரி இல்லை ...நானும் டிகிரி இல்லை: மேயரை பார்த்து பேசிய தி.மு.க., கவுன்சிலர்
UPDATED : ஏப் 25, 2025 06:07 AM
ADDED : ஏப் 25, 2025 01:51 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்ட தகவல்களை ஆங்கிலத்தில் தந்ததால் தமிழில் தரக்கோரி  தி.மு.க., பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள் மேயரை பார்த்து 'நீயும் டிகிரி இல்லை ... நானும் டிகிரி இல்லை ...மாநகராட்சி விவரங்களை தமிழில் தாருங்கள்' எனக் கேட்டது நகைச்சுவையை ஏற்படுத்தியது.
இம்மாநகராட்சி கூட்டம்  நடந்தது. மேயர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கமிஷனர் சுகபுத்ரா, துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் 2019 ல்  துவங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சமுதாய நலக்கூடம் கட்டடம் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் உள்ளது என தி.மு.க.,மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா பேசினார்.
அந்த கட்டடப் பணிகள் துவங்கும் போது இடம் எங்கள் வார்டில் இருந்தது. தற்போது எந்த வார்டில் உள்ளது என கேட்டார். அதற்கு தி.மு.க., கவுன்சிலர் ரம்ஜான் அலி 'அது எங்கள் வார்டில் உள்ளது. நாங்கள் தான் அதற்கு நிலம் தந்துள்ளோம் 'என பேசினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் மையங்களில் செயல்படும் ஸ்கேடா எனும் குடிநீர் அளவை கண்டறியும் கருவிகள் பாதிக்கும் மேற்பட்டவை செயல்படாமல் உள்ளது குறித்து கவுன்சிலர்கள் கேட்டனர். அவற்றை சீர் செய்ய உள்ளதாக கமிஷனர் சுகபுத்ரா தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ள காந்தி மார்க்கெட் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். விரைவில் மார்க்கெட் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தரப்படும் தீர்மானம் உள்ளிட்டவை விவரங்கள் ஆங்கிலத்தில் உள்ளன என பேசிய வயது மூத்த தி.மு.க. பெண் கவுன்சிலர் பேச்சியம்மாள், மேயர் ராமகிருஷ்ணனை பார்த்து 'நீயும் டிகிரி இல்லை ... நானும் டிகிரி இல்லை ... பிறகு எதற்கு விவரங்களை ஆங்கிலத்தில் தருகிறீர்கள். தமிழில் தாருங்கள் ''என்றார் .இது மாநகராட்சி அவையில் நகைச்சுவையை ஏற்படுத்தியது. கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசுவதற்கு அதிக நேரம் தரப்படுகிறது எனக்கூறி தமக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என தி.மு.க. கவுன்சிலர் ரவீந்தர் ஆத்திரத்தில் தன் முன்பாக இருந்த குடிநீர் பாட்டிலை துாக்கி வீசிவிட்டு  வெளிநடப்பு செய்தார்.

