/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அதிகாரியை சிக்க வைத்த தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
/
அதிகாரியை சிக்க வைத்த தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
அதிகாரியை சிக்க வைத்த தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
அதிகாரியை சிக்க வைத்த தீயணைப்பு வீரர் 'சஸ்பெண்ட்'
ADDED : டிச 06, 2025 02:05 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், 2.50 லட்சம் ரூபாய் வைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான தீயணைப்பு வீரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருநெல்வேலி, என்.ஜி.ஓ., - பி., காலனியில் உள்ள தென் மாவட்டங்களுக்கான தீயணைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில், துணை இயக்குநர் சரவணபாபு, 56, என்பவரை லஞ்ச வழக்கில் சிக்க வைக்க, நவ., 17 நள்ளிரவில், முகமூடி அணிந்த நபர், 2.50 லட்சம் ரூபாயை வைத்து விட்டு சென்றார்.
மறுநாள் அங்கு சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அப்பணத்தை பறிமுதல் செய்து, சரவணபாபு மீது வழக்குபதிவு செய்தனர்.
எதிர் வீட்டு 'சிசிடிவி' கேமராவில், முகமூடி நபர் பணத்தை வைத்து செல்வது பதிவாகியிருந்தது.
நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம், சரவணபாபு புகார் அளித்தார்.
போலீஸ் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் தலைமையிலான சிறப்பு போலீஸ் குழு விசாரித்து, துாத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரர் ஆனந்த், 30, என்பவரை கைது செய்தது. அவரை தற்போது போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
விசாரணை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நேர்மையாக செயல்படும் தீயணைப்பு துணை இயக்குநரை, லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க, சில தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதற்காக, லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பும், இதேபோன்ற வழக்குகளில், சில அதிகாரிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வலைப்பின்னலை உருவாக்கியவர்கள் சென்னையில் இருந்தே இயக்கியுள்ளனர்.
இதில், தென் மாவட்ட தீயணைப்பு துறையின் சில உயர் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான ஆனந்தை, 'சஸ்பெண்ட்' செய்து, துாத்துக்குடி மாவட்டதீயணைப்பு அதிகாரி கணேசன் உத்தரவிட்டார்.

