/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இரவில் டீ குடிக்க வந்தபோது கொலை தவிக்கும் ஒடிசா தொழிலாளி குடும்பம்
/
இரவில் டீ குடிக்க வந்தபோது கொலை தவிக்கும் ஒடிசா தொழிலாளி குடும்பம்
இரவில் டீ குடிக்க வந்தபோது கொலை தவிக்கும் ஒடிசா தொழிலாளி குடும்பம்
இரவில் டீ குடிக்க வந்தபோது கொலை தவிக்கும் ஒடிசா தொழிலாளி குடும்பம்
ADDED : மார் 05, 2026 06:32 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இரவில் டீ குடிக்க வந்தபோது கொலை செய்யப்பட்ட ஒடிசா மாநில தொழிலாளியின் குடும்பத்தை அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் மார்ச் 2ம் தேதி இரவில் அரிவாள்களுடன் டூவீலர்களில் சென்ற 9 பேர் கும்பல் சரமாரியாக வெட்டியதில் அப்பாவி மாற்றுத்திறனாளி ஜான் மார்க் 45, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திரிநாத் கட்டா 45, ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 5 பேர் காயமுற்றனர். இவர்களில் நெல்சன் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜான் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அலைபேசி வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறினார்.
அவரது குடும்பத்தினரை சந்தித்த சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, இலவச வீடு, அரசு நிவாரண நிதி வழங்குவதாக உறுதியளித்தார். இருப்பினும் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு ஜான் உடலை குடும்பத்தினர் திரும்ப பெற மறுத்து விட்டனர்.
இந்த சம்பவத்தில் மிகவும் பரிதாபத்திற்குரியது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரிநாத் கட்டாவின் குடும்பமாகும். பிழைப்பு தேடி வந்து நாங்குநேரி அருகே செங்கல் சூளையில் திரிநாத் கட்டா ,அவரது மனைவி மஸ்தானி இரண்டு மகன்கள் மற்றும் ஜார்கண்ட், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றினர். வேலை முடிந்து இரவில் அங்கு டீ குடிக்க வந்த திரிநாத் கட்டா கொல்லப்பட்டார்.
அவரது உடல் நேற்று மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு மாநகராட்சி தகன கூடத்தில் தகனம் செய்யப்பட்டது. ஆனால் இவரது குடும்பத்தினர் கண்டுகொள்ளப்படவில்லை. அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை. தங்களுக்கும் அரசின் நிதி உதவி வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

