/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தி.மு.க., பிரமுகர் வீடு, டூவீலர் ஷோரூம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு
/
தி.மு.க., பிரமுகர் வீடு, டூவீலர் ஷோரூம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு
தி.மு.க., பிரமுகர் வீடு, டூவீலர் ஷோரூம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு
தி.மு.க., பிரமுகர் வீடு, டூவீலர் ஷோரூம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு: பங்க் ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பறிப்பு
ADDED : மே 15, 2025 02:34 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் 2 டூவீலர்களில் சென்ற 4 பேர் கும்பல் நள்ளிரவில் தி.மு.க., பிரமுகரின் வீடு மீதும் டூவீலர் ஷோரூம் மீதும் சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசினர். பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் வைத்திருந்த பணப்பையை பறித்து சென்றனர்.
திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளத்தில் வசிப்பவர் செல்வ சங்கர் 45. தி.மு.க., ஒன்றிய பொருளாளர். தி.மு.க., கூட்டங்களுக்கு கட்சி கொடி கட்டும் பணி உள்ளிட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார்.
இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய தி.மு.க., கவுன்சிலராக உள்ளார்.
நேற்று அதிகாலை 2:45 மணிக்கு இரு டூவீலர்களில் அவரது வீட்டுக்கு முன் வந்த 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீட்டின் உட்பகுதியில் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர். அவை வீட்டின் போர்டிகோ பகுதியில் விழுந்து வெடித்து புகைமண்டலமாக மாறியது. சில குண்டுகள் தெருவிலேயே விழுந்து தீ பிடித்து எரிந்தன.
குண்டு வீச்சு சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்த போது கும்பல் தப்பிவிட்டனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் உடைந்து கிடந்த பொருட்களை சேகரித்தனர்.
பணப்பை பறிப்பு:
தி.மு.க., பிரமுகர் மீது குண்டு வீசிய கும்பல் குறித்து விசாரணை நடந்த போது திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் தளபதி சமுத்திரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இதே நான்கு பேர் கும்பல் பெட்ரோல் நிரப்புவதாக கூறி வண்டிகளை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஊழியர் மணி 23, வைத்திருந்த பணப்பையைப் பறித்து சென்றனர். அதில் ரூ. 20 ஆயிரம் பணம் இருந்தது. இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை மூலம் விசாரித்தனர்.
டூவீலர் ஷோரூம் மீது குண்டு வீச்சு...
இந்த இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட அதே கும்பல் தான் அதிகாலை 12:45 மணிக்கு திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் நுழைவு ஆர்ச் பகுதியில் இடது புறம் வயல் தெருவில் உள்ள ராயல் என்பீல்டு டூவீலர் ஷோரூம் மீதும் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
ஆனால் ஷட்டர்கள் பூட்டப்பட்டு இருந்ததால் குண்டுகள் தரையில் விழுந்து வெடித்தன. கடைக்காரரும் அங்கு நடந்தது தெரியாமல் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தி.மு.க., பிரமுகர் வீடு மீது குண்டு வீச்சு, பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பண பறிப்பு சம்பவங்களுக்கு பிறகு அங்கிருந்து சிசிடிவிகளை பார்த்த போது அதே நான்கு பேர் கும்பல் முதலில் டூ வீலர் ஷோரூமில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு பின்னர் முன்னீர் பள்ளம் சென்றது தெரிய வந்தது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்து திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரவுடியிசம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் மது, கஞ்சா போதையில் வன்முறையில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் வள்ளியூர் பணகுடி அருகே பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கி ரூ. 33 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் நடந்தது. இதுபோல மாநகரப் பகுதியிலும் அடிக்கடி டூவீலரில் சென்று வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட ரவுடிசம் தொடர்கிறது.