ADDED : ஆக 19, 2025 01:37 AM

திருநெல்வேலி; திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெயிலில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இம்மாநகராட்சியில் சுய உதவி குழுக்கள் மூலம் 523 தூய்மை பணியாளர்கள், ராம் அண்ட் கோ நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 850-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு அரசு நிர்ணயித்த ரூ. 540 சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் ரூ.460 முதல் ரூ.520 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்., இ.எஸ்.ஐ தொகைகள் செலுத்தப்படவில்லை.
இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் முன் கொளுத்தும் வெயிலில் தரையில் அமர்ந்து முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பிறகு அவர்கள் கமிஷனர் மோனிகா ராணாவை சந்தித்து மனு அளித்தனர்.