/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
'அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்'
/
'அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்'
'அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்'
'அறிவியல் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்'
ADDED : ஜன 29, 2025 01:33 AM

திருநெல்வேலி:''மாணவர்கள் புதிய அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்,'' என, திருநெல்வேலி மேலத்திடியூர் பி.எஸ்.என்.,இன்ஜினியரிங் கல்லூரி வெள்ளி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: 2047ல் இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது வளர்ந்த நாடாக தன்னிறைவு பெற்ற நாடாக இருக்கும். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலையில் இருந்தது. 2014ல் 16வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் மேலும் முன்னிலையை அடையும். இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியிருக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆராய்ச்சிகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அறிவு சார் சொத்துக்களை உருவாக்குவதில் புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். அறிவுசார் சொத்துக்களை உருவாக்குவதில் சர்வதேச அளவில் சீனா 46 சதவீத பங்களிப்பை செய்து வருகிறது. அமெரிக்கா 18 சதவீத பங்களிப்பை அளித்து வருகிறது. 2020ம் ஆண்டில் இந்தியாவில் 22 ஆயிரம் அறிவு சார் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது உலக அளவில் 0.5 சதவீதம் ஆகும். அடுத்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி., போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களும் உள்ளன. 2024ல் மட்டும் 400 பொருட்களுக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. மக்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட ரோபோடிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்பங்களில் உலகம் முன்னேறி வருகிறது. அதற்கு ஏற்ப நாம் தொழில்நுட்பத்தில் வளர வேண்டும்.
இங்கிலாந்தில் இருந்து மெக்காலே தலைமையில் குழுவினர் இந்தியாவிற்கு வந்து ஆய்வு செய்தனர். ஹிந்துக்களின் பாரம்பரியம், அறிவு சார் சொத்து உள்ளிட்டவற்றை கண்டறிந்து சேகரித்து மொழிபெயர்ப்பு செய்ய ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிந்துரை செய்தனர். நாம் நம்முடைய பாரம்பரியத்தை பற்றி பெருமைப்பட வேண்டும். நமது அடையாளத்தையும் தனித்தன்மையையும் ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர். நமது தற்சார்பை சிதைத்து விட்டனர். 10 ஆண்டுகளாக படிப்படியான முன்னேற்றத்தை நம்பாமல் துள்ளி குதிக்கும் வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறோம். உலகத்திற்கே வெளிச்சம் கொடுக்கும் வகையில் இந்தியாவின் அறிவுசார் சொத்து உள்ளது.
உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பேரழிவு என்பது தூரத்தில் இல்லை. காரணம் உலகம் வெறும் தொழில்நுட்பத்தையும் அறிவியலை மட்டுமே நம்பி இருக்கிறது. ஆனால் இந்தியா உலகத்தையே பாதுகாக்கும் சிந்தனையையும் ஒருங்கிணைந்த வாழும் முறையையும் கொண்டுள்ளது. இவ்வாறு பேசினார்.
ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கே. ராமசுப்பிரமணியன், காந்தி எஸ்.மூர்த்தி, ஆதித்ய கொலச்சனா, கைவினைக்கலைஞர் பி.மோனி ஆகியோருக்கு கவர்னர் விருதுகளை வழங்கினார். முன்னதாக கல்லூரி நிர்வாக செயலர் செல்வகுமார் வரவேற்றார். சேர்மன் சுயம்பு தலைமை வகித்தார். நிர்வாகி தெய்வப்பிரகாஷ் நன்றி கூறினார்.