/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தொழிலாளி வெட்டிக்கொலை ரவுடி மீது துப்பாக்கி சூடு
/
தொழிலாளி வெட்டிக்கொலை ரவுடி மீது துப்பாக்கி சூடு
ADDED : மார் 08, 2024 02:01 AM

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தென்திருபுவனத்தைச் சேர்ந்தவர் பேச்சித்துரை, 24. கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சந்துரு, 23. ரவுடிகளான இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை, 5:00 மணிக்கு இருவரும் ஒரே டூ - வீலரில் அம்பாசமுத்திரத்தில் இருந்து வீரவநல்லுார் அருகே வெள்ளாங்குழிக்கு வந்தனர். வழியில் ரோட்டோரமாக அரிவாளால் தாக்கி தகராறில் ஈடுபட்டனர்.
இதனை, சாலை பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட கருப்பசாமி, 42, கண்டித்துள்ளார். அவரை இருவரும் துரத்தி, அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
கருப்பசாமி, விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்தவர். அம்பாசமுத்திரம் சாலை பணியில் இருந்தார். தொடர்ந்து அந்த கும்பல் அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசனை அரிவாளால் வெட்டி விட்டு, டூ - வீலரில் தப்பியது.
இரவில் ரவுடிகள் இருவரும் திருப்புடைமருதுார் சென்றனர். அங்கு அரசு பஸ்சை அரிவாளால் தாக்கி சேதப்படுத்தினர். தகவலறிந்து போலீசார் அவர்களை பிடிக்கச் சென்ற போது, ஏட்டு செந்தில் என்பவரையும் அந்த ரவுடிகள் அரிவாளால் வெட்டினர். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் போலீசார் திருப்புடைமருதுார் சென்றனர். அங்கு ரவுடிகள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், பேச்சித்துரையை காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சந்துரு தப்பி ஓட்டம் பிடித்தார். வீரவநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வீரவநல்லுார் பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் மீண்டும் தலைதுாக்கி உள்ளது. சில மாதங்களுக்கு முன் அரசு டவுன் பஸ்சில் ஏறிய ரவுடிகள், டிரைவர், கண்டக்டரை அரிவாளால் வெட்டிய சம்பவம் வீரவநல்லுாரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

