/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜாதி மோதலில் மூவர் கொடூர கொலை: 4 பேருக்கு துாக்கு; 7 பேருக்கு ஆயுள்
/
ஜாதி மோதலில் மூவர் கொடூர கொலை: 4 பேருக்கு துாக்கு; 7 பேருக்கு ஆயுள்
ஜாதி மோதலில் மூவர் கொடூர கொலை: 4 பேருக்கு துாக்கு; 7 பேருக்கு ஆயுள்
ஜாதி மோதலில் மூவர் கொடூர கொலை: 4 பேருக்கு துாக்கு; 7 பேருக்கு ஆயுள்
UPDATED : செப் 27, 2024 07:05 AM
ADDED : செப் 27, 2024 02:32 AM

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம், உடப்பன்குளத்தில் 2014 ஜனவரியில் ஜாதி கொடிக்கம்பங்கள் அருகே பட்டாசு வெடித்த தகராறில் இரு தரப்பினருக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
மே 28ல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காளிராஜ், 45, வேணுகோபால், 42, முருகன், 40, ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் செஷன்ஸ், வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
குற்றம் சாட்டப்பட்ட ஜெயராமன், பொன்ராஜ், சரவணன் ஆகியோர் வழக்கு நடந்த காலத்தில் இறந்துவிட்டனர். மற்ற, 11 பேர் குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்த, 11 பேரில் பொன்னுமணி, உலக்கன், சுரேஷ் ஆகியோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை, 11:00 மணிக்கு தீர்ப்பு அறிவிக்கப்பட இருந்தது. சிகிச்சையில் இருந்த மூவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படாததால், அவர்களை அழைத்து வரும்படி கூறி, தீர்ப்பை நீதிபதி மாலை, 4:00 மணிக்கு தள்ளிவைத்தார்.
ஆனால், மாலை 4:00 மணிக்கு புகார்தாரர் தரப்பில் யாரும் வரவில்லை. இதனால் தீர்ப்பு வாசிப்பை மீண்டும் ஒத்தி வைத்து, இரவு, 8:30 மணிக்கு நீதிபதி சுரேஷ்குமார் மீண்டும் கோர்ட்டுக்கு வந்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில், உடப்பன்குளத்தைச் சேர்ந்த பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு துாக்கு தண்டனையும், இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தார்.
வெளியப்பன் மகன் கண்ணன், சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். குட்டிராஜ், உலக்கன், பாலமுருகன், கண்ணன் என பெயர் கொண்ட இரண்டு பேர் என, ஐந்து பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
அனைவருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் திருநெல்வேலி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.