/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிப்பு
/
திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிப்பு
திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிப்பு
திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.1.26 கோடி அபராதம் விதிப்பு
ADDED : அக் 28, 2025 12:06 AM

திருநெல்வேலி: குப்பையை முறையாக கையாளாத திருநெல்வேலி மாநகராட்சிக்கு, 1.26 கோடி ரூபாய் அபராதம் விதிக்க, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் பரிந்துரை செய்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி குப்பை சங்கரன்கோவில் சாலையில் உள்ள ராமையன்பட்டி கிடங்கில் கொட்டப்படுகின்றன. பாதாள சாக்கடை கழிவுநீரும் குழாய்கள் மூலம் அங்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படுகிறது.
கடந்த ஜூலையில் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து எரிந்த குப்பையால், மாநகராட்சி பகுதி முழுதும் காற்று மாசு ஏற்பட்டது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஜூலை 16ம் தேதி அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
குப்பையை முறையாக பிரித்து கையாளாதது தெரியவந்தது.
கடந்த 2016ல் வெளியிடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகளை, 2020 மார்ச் 31க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அதை நடைமுறைப்படுத்த தவறிய மாநகராட்சிக்கு 2020 ஏப்ரல் முதல் 2025 ஜூன் வரை 63 மாதங் களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, குப்பையை முறையாக அகற்றாததற்கும், 63 மாதங்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இரண்டையும் சேர்த்து மொத்தம் 1 கோடியே 26 லட்சம் ரூபாயை வசூலிக்க வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருஷ்ணபாபு வாரிய தலைமைக்கு பரிந்துரைத்துள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன், தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்ட கடிதத்திற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் இந்த பதிலை அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் இருந்து பல்வேறு பகுதிகளில் சாக்கடைகள், தாமிரபரணியில் நேரடியாக விடுவதை கண்டித்தும் கடந்த மாதம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சிக்கு, 1.55 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

