ADDED : ஜன 03, 2024 01:08 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரண நிதியை பெற இன்றே கடைசி என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் டிச. 17, 18 ல் பெய்த அதிகன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளானார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.6000 நிவாரண நிதியும், மற்ற பகுதிகளில் ரூ. 1000 நிவாரண நிதியும் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. நேற்று மதியம் 2:00 மணி வரை 92 சதவீதம் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு விட்டது.
இதுவரை டோக்கன் பெறாதவர்கள், டோக்கன் தவற விட்டவர்கள் இன்று (ஜன.3 ) மாலை 5:00 மணிக்குள் கைரேகை வைத்து நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம். நாளை (ஜன.4) முதல் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் துவங்குவதால் நிவாரண நிதி பெற இனி அவகாசம் இல்லை என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.