ADDED : அக் 19, 2025 03:27 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி அருகே பட்டன்கல்லுாரைச் சேர்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பச்சிலை மருந்து தருவதாக கூறி மூன்றரை கிராம் தாலியை திருடிய திருப்பூர் அய்யனாரை 30, போலீசார் கைது செய்தனர்.
பட்டன்கல்லூரைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி சண்முகத்தாய் 47. இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீடு அருகில் கட்டிலில் படுத்திருந்தார். செப்., 15 ல் அவ்வழியாக உடுக்கையுடன் குறி சொல்வது போல சென்ற ஒரு நபர் அவரிடம் பேச்சு கொடுத்தார். உடல் நலம் சீராக பச்சிலை மருந்து தருவதாக கூறினார். அந்த மருந்து தயாரிக்க தேங்காய் எண்ணெய் கொண்டு வருமாறும் கூறினார். சண்முகத்தாய் பக்கத்துக்கடையில் தேங்காய் எண்ணெய் வாங்கி வரச்சென்றார். அதை பயன்படுத்தி அந்த நபர் மருந்து தயார் செய்து கொடுத்தார். அதை உடலில் தடவ கழுத்தில் இருந்த தாலியை சண்முகத்தாய் கழற்றி வைத்தார்.
அதை பயன்படுத்தி அந்த நபர் தாலியை திருடி சென்றார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சிசி டிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் இதில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் கொமாரலிங்கம் பெருமாள்புதூரைச் சேர்ந்த அய்யனாரை கைது செய்தனர்.