/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒருங்கிணைந்த பூந்தமல்லி கோர்ட் திறப்பு எப்போது? : பணிகள் முடிந்தும் தொடரும் தாமதம்
/
ஒருங்கிணைந்த பூந்தமல்லி கோர்ட் திறப்பு எப்போது? : பணிகள் முடிந்தும் தொடரும் தாமதம்
ஒருங்கிணைந்த பூந்தமல்லி கோர்ட் திறப்பு எப்போது? : பணிகள் முடிந்தும் தொடரும் தாமதம்
ஒருங்கிணைந்த பூந்தமல்லி கோர்ட் திறப்பு எப்போது? : பணிகள் முடிந்தும் தொடரும் தாமதம்
ADDED : ஜூலை 11, 2011 11:34 PM
பூந்தமல்லி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், நான்கரை கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு ஓராண்டாகியும், திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.
புதிய அரசு அதை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூந்தமல்லியில் முதன்மை மாவட்ட உரிமையியல் கோர்ட், இரண்டு முனிசிபல் மேஜிஸ்திரேட் கோர்ட்டுகளும், இரண்டு குற்றவியல் மேஜிஸ்திரேட் கோர்ட்டுகளும் இயங்குகின்றன. இங்கு சட்டம் ஒழுங்கு வழக்குகள், குற்றவியல் வழக்குகள், நிலமோசடி வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.
இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், குற்றவியல் வழக்குகளில் கைதான குற்றவாளிகள், அவர்களுக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் என தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அதற்கேற்ப இந்த கோர்ட்டுகள், போதுமான இடவசதியின்றி மிகவும் குறுகிய அறைகளில் அமைந்துள்ன. சாலையை விட மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள பூந்தமல்லி கோர்ட் வளாகம், சிறிய மழை பெய்தாலும் நீர் சூழ்ந்துவிடுகிறது. மழைநீரை வெளியேற்ற பல நாட்கள் ஆகிறது. இதனால், கோர்ட் பணி கடுமையாக பாதிக்கிறது.
இதை கருத்தில் கொண்டு, பூந்தமல்லி - திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டி நவீன முறையில் ஒருங்கிணைந்த பூந்தமல்லி நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு, கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. 3, 198 சதுர மீட்டர் பரப்பளவில், லிப்டுடன் கூடிய மூன்று கோர்ட் ஹால்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள, இருபுறமும் கதவுகள் திறக்கும் வகையில் ஒரு லிப்டும் அமைக்க முடிவானது.
மேலும், இப்பகுதியிலேயே 232.88 சதுர மீட்டரில் 29 லட்சம் ரூபாய் செலவில் நீதிபதி குடியிருப்பு ஒன்றும் கட்ட திட்டமிடப்பட்டது.
பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமான பணி கடந்த 2009ம் ஆண்டு மே 25ம் தேதி துவங்கியது. முதன்மையான பணிகள் அனைத்தும் கடந்த 2010ம் ஆண்டு மே 24ம் தேதியுடன் முடிவடைந்தது. கோர்ட் ஹால்களுக்கு தேவையான பர்னிச்சர்கள் மற்றும் கூடுதல் பணிகளுக்காக மேலும் 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோர்ட் கட்டுமானம் மற்றும் உள்அலங்கார பணிகளும் முடிவடைந்துவிட்டது. நான்கரை கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டிய ஒருங்கிணைந்த பூந்தமல்லி நீதிமன்றம் ஓராண்டாகியும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது.
புதிதாக கட்டிய ஒருங்கிணைந்த பூந்தமல்லி நீதிமன்றம் பயன்படுத்தப்படாமலேயே பாழடைந்து வருகிறது. எனவே, பூந்தமல்லி கோர்ட்டை புதிய அரசு திறந்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து செய்தித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் செந்தமிழனிடம் கேட்டபோது, 'இப்போதுதான் கூடுதலாக சட்டத்துறை பொறுப்பை ஏற்றுள்ளேன். அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகிறேன். இதில், பூந்தமல்லி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் திறப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆலோசனை பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். நான்கரை கோடி ரூபாய் செலவில் புதிதாக பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டி, திறக்கப்படாமல் இருப்பது குறித்து ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐகோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ஜி.எத்திராஜுலு -