/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விபத்து ஏற்படுத்திய லாரி யாருடையது திருத்தணியில் உறவினர்கள் கேள்வி ஆர்ப்பாட்டம் செய்த 200 பேர் அதிரடி கைது
/
விபத்து ஏற்படுத்திய லாரி யாருடையது திருத்தணியில் உறவினர்கள் கேள்வி ஆர்ப்பாட்டம் செய்த 200 பேர் அதிரடி கைது
விபத்து ஏற்படுத்திய லாரி யாருடையது திருத்தணியில் உறவினர்கள் கேள்வி ஆர்ப்பாட்டம் செய்த 200 பேர் அதிரடி கைது
விபத்து ஏற்படுத்திய லாரி யாருடையது திருத்தணியில் உறவினர்கள் கேள்வி ஆர்ப்பாட்டம் செய்த 200 பேர் அதிரடி கைது
ADDED : மார் 09, 2025 02:57 AM

திருத்தணி: திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகையில் நேற்று முன்தினம், டாரஸ் லாரி மோதியதில், தடம் எண்: 'டி48' அரசு பேருந்து விபத்துக்குள்ளானது.
இதில் பயணம் செய்த, அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 30 பேர், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என, 500க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, அம்மையார்குப்பத்தில் இருந்து திருத்தணி அரசு மருத்துவமனைக்கு, வாகனங்களில் புறப்பட்டனர்.
காசோலை
இத்தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி போலீசார், அவர்களது வாகனங்களை தடுத்து நிறுத்தினர். எனினும், இருசக்கர வாகனங்களில் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பலரும் குவிந்தனர்.
அங்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்த, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நான்கு பேரின் குடும்பத்தினரிடம், சிறுபான்மை துறை அமைச்சர் நாசர், கலெக்டர் பிரதாப், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
அப்போது, 'உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, உறவினர்கள் கோரிக்கை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், ''இதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறுதிமொழி கொடுத்தால் தான், இறந்தவர்களின் உடலை வாங்கிச் செல்வதாக கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அரசு மருத்துவமனை நுழைவாயில் முன் அமர்ந்து, கோஷம் எழுப்பினர்.
விபத்தில் உயிரிழந்த மகேஷின் உறவினர் ஒருவர் கூறியதாவது:
அமைச்சர் அளித்த நிவாரண தொகை காசோலையை நாங்கள் வாங்கவில்லை. கட்டாயப்படுத்தி திணித்துவிட்டு, எங்களின் கோரிக்கைகளை கேட்காமல் அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ., சென்றுவிட்டனர்.
திட்டமிட்டு நடந்த விபத்து இல்லை எனக் கூறும் அமைச்சர், விபத்துக்கு காரணமான லாரி, யாருடையது என சொல்ல மறுக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா, மாலை 5:30 மணி வரை பேச்சு நடத்தியும், இறந்தவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை, போலீசார் கைது செய்து, பின் விடுவித்தனர். இரவு 8:30 மணிக்கு நான்கு பேரின் உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
லாரி டிரைவர் கைது
கே.ஜி.கண்டிகை அருகே அரசு பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய, டாரஸ் லாரி ஓட்டுநர் ஊத்துக்கோட்டை அடுத்த வெம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், 55, என்பவரை, திருத்தணி போலீசார் நேற்று கைது செய்தனர்.