/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கூட்டுகுடிநீர் இணைப்புக்கு புதிய கட்டணம் நவம்பரில் அமல்! நகராட்சியில் வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு
/
திருத்தணி கூட்டுகுடிநீர் இணைப்புக்கு புதிய கட்டணம் நவம்பரில் அமல்! நகராட்சியில் வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு
திருத்தணி கூட்டுகுடிநீர் இணைப்புக்கு புதிய கட்டணம் நவம்பரில் அமல்! நகராட்சியில் வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு
திருத்தணி கூட்டுகுடிநீர் இணைப்புக்கு புதிய கட்டணம் நவம்பரில் அமல்! நகராட்சியில் வருவாயை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு
UPDATED : அக் 01, 2025 01:24 AM
ADDED : அக் 01, 2025 12:02 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியின் வருவாய் உயர்த்தும் வகையில், வீடு, வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிக்கு குடிநீர் இணைப்பு வழங்க புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலையோர கடைகளுக்கும் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணத்தை நவம்பர் முதல் நடைமுறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் 14,000 குடும்பத்தினரும், 2,500க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் உள்ளன.
வீடுகள், வணிக வளாகம் மற்றும் தொழில் நிறுவனம் போன்றவைகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி உள்ளிட்ட வரிகளால் ஆண்டுக்கு, 7.20 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் மூலம் நகராட்சியில் அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வந்து, 21 வார்டுகளிலும் வீடு, வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி முதல், ஆறு மாதங்களுக்கு சோதனை ஓட்டம் என்ற பெயரில் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது.
சோதனை ஓட்டம் முடிந்ததால், அனைத்து வீடுகள், வணிக வளாகங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி, முன்வைப்பு தொகை மற்றும் மாத கட்டண தொகை என கட்டணம் நிர்ணயம் செய்து வசூலிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுதவிர திருத்தணி நகராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலையோரம் பல்வேறு கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 15 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம் கட்டண தொகை வசூலித்து வந்தது.
இதை தினசரி வசூலுக்கு பதில் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்த, தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகராட்சியில், 13,500 வீடுகள் 1,850 வணிக வளாகங்களுக்கு மட்டும் தற்போது சொத்துவரி வசூலிக்கப்படுகிறது. விடுபட்ட வீடுகள், வணிக வளாகங்கள் குறித்து கணக்கெடுத்து, புதியதாக சொத்துவரி விதித்து வசூலித்து வருகிறோம்.
குடிநீர் இணைப்பு பொறுத்தவரை, 1,600 வீடுகளுக்கு மட்டும் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் குடிநீர் இணைப்பு பெறாமல் உள்ளனர்.
தற்போது திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம், 13,500 குடிநீர் இணைப்புகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் மாதம் ஒருமுறை, வீடுகளுக்கு, 100 ரூபாயும், வணிக வளாகங்களுக்கு, 200 ரூபாயும், தொழிற்சாலைகளுக்கு, 300 ரூபாய் என குடிநீர் கட்டணம் நிர்ணயித்துள்ளோம்.
இதுதவிர குடிநீர் இணைப்பு பெறுவதற்கு முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலையோர கடைகளுக்கு ஆண்டுக்கு, 500 முதல், 1,500 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளோம். நவம்பர் முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் நகராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.