/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3 மாதத்திற்கு முன் பள்ளம் ரெடி: கால்வாய் என்னாச்சு?
/
3 மாதத்திற்கு முன் பள்ளம் ரெடி: கால்வாய் என்னாச்சு?
3 மாதத்திற்கு முன் பள்ளம் ரெடி: கால்வாய் என்னாச்சு?
3 மாதத்திற்கு முன் பள்ளம் ரெடி: கால்வாய் என்னாச்சு?
ADDED : செப் 05, 2024 01:01 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி ம.பொ.சி., மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள், திருத்தணி பேருந்து நிலையம், முருகன் கோவில் மற்றும் அரக்கோணம் மார்க்கமாக சென்று வருகின்றன.
இச்சாலையின் ஒருபுறம் மட்டும் நெடுஞ்சாலை துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைத்துள்ளன. மறுபுறம் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், ரயில்வே கால்வாய் வழியாக மழைநீர் சென்று வந்தது.
நான்கு மாதங்களுக்கு முன், ரயில்வே நிர்வாகம் மழைநீர் செல்வதை தடுத்து நிறுத்தியது. இதனால், மழை பெய்யும் போது மழைநீர் செல்வதற்கு வழியின்றி, சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதை தொடர்ந்து, திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், ம.பொ.சி., சாலை, பழைய சிண்டிகேட் வங்கி பகுதியில் இருந்து, ரயில் நிலையம் வரை, மழைநீர் செல்ல கால்வாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனால், பள்ளம் தோண்டி மூன்று மாதங்களான நிலையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி துவங்கவில்லை. இதனால், இச்சாலை வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் கூறியதாவது:
ம.பொ.சி.சாலையில், 600 மீட்டர் துாரம் மழைநீர் வடிகால்வாய் கட்டுவதற்கு, 2.20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, பணிகளுக்கு டெண்டர் விடும் பணி துவங்கியுள்ளது. இதை தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும். அதன்பின், சாலையில் மழைநீர் தேங்குவது நிரந்தரமாக தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.