ADDED : ஆக 16, 2024 11:19 PM
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுப்பேட்டை மோகன்பாபு, 24, என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம், 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே எம்.என்.கண்டிகை கிராமத்தில், கூடுதல் விலைக்கு மதுவிற்றுக்கொண்டிருந்த லதா, 44, என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம், 18 மது பாட்டில்கள், நான்கு பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி ஒன்றியம், வி.கே.ஆர்.புரம் பகுதியில் மதுபாட்டில்கள் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி.,ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின் பேரில் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் நேற்று மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, வி.கே.ஆர்.புரம் காலனியைச் சேர்ந்த சந்திரன் மனைவி சுமதி, 33 என்பவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 50 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து, சுமதியை போலீசார் கைது செய்தனர்.