/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளை
ADDED : ஜூலை 06, 2024 01:41 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில் உள்ள, ராயல் மாடர்ன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிமுத்து, 65; இவர் சென்னை மாதவரம் அருகே, வெல்டிங் பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி பாண்டியம்மாள், 60, மீஞ்சூர் பகுதியில் பழைய துணிகளை வாங்கி, அதை மறுசுழற்சிக்கு விற்பனைக்கு அனுப்பும் கடை வைத்து உள்ளார்.
ஹரிமுத்து, பாண்டியம்மாள் இருவரும் பணி தொடர்பாக தினமும், காலையில் சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பணிக்கு சென்ற இருவரும், இரவு வீடு திரும்பினர்.
வீட்டின் முன்பகுதி சுற்றுச்சுவர் கேட் கதவு, முகப்பு கிரில் கதவு ஆகியவற்றின் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பிரதான மரக்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 40 சவரன் நகை மற்றும், 4.50 லட்சம் ரூபாய் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து ஹரிமுத்து, மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்டவர்கள், தடயங்களை மறைக்க வீடு முழுதும் மிளகாய் பொடியை துாவிவிட்டு சென்றது தெரிந்தது.
மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையர்கள் வீட்டின் பின்புற சுவர் வழியாக மாடியில் ஏறி, படிக்கட்டுகளில் கீழிறங்கி, கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
இதுபோன்று மாடிப்படி வழியாக வருவதும், கொள்ளையடித்த பின், மிளகாய் பொடி துாவி செல்லும் திருடர்கள் சிலர் இருப்பதாகவும், அவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார், அனுப்பம்பட்டு பகுதியில் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு இருந்தால், கொள்ளை சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என, கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.