/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் நெரிசல், திருட்டு, வன்முறை தடுப்பதற்காக அமைத்த 74 'சிசிடிவி' பழுது
/
திருத்தணியில் நெரிசல், திருட்டு, வன்முறை தடுப்பதற்காக அமைத்த 74 'சிசிடிவி' பழுது
திருத்தணியில் நெரிசல், திருட்டு, வன்முறை தடுப்பதற்காக அமைத்த 74 'சிசிடிவி' பழுது
திருத்தணியில் நெரிசல், திருட்டு, வன்முறை தடுப்பதற்காக அமைத்த 74 'சிசிடிவி' பழுது
ADDED : மார் 05, 2025 02:18 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14,000 குடும்பத்தினர் மற்றும் 2,300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடான முருகன் கோவில் உள்ளது.
இதனால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் வாயிலாக திருத்தணி கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திருத்தணி ரயில் நிலையம், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, டி.எஸ்.பி., அலுவலகம், ஆர்.டி.ஓ., தாசில்தார், வேளாண் உட்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு, திருத்தணியை சுற்றியுள்ள, 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இக்கிராம வாசிகள், அத்திவாசிய பணிகள் காரணமாக திருத்தணி பஜாருக்கு வந்து செல்கின்றனர்.
திருத்தணி நகரில் 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று வருவதாலும், மக்கள் நடமாட்டம் உள்ளதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதுதவிர திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களும் அதிகளவில் நடப்பதால், போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர்.
இதை தொடர்ந்து, ஏழு ஆண்டுகளுக்கு முன், திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசல் திருட்டு, வழிப்பறி, விபத்துகள் நடப்பதை தடுப்பதற்காக, முக்கிய சாலை சந்திப்பு மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், 74 'சிசிடிவி' கேமராக்கள் போலீசார் பொருத்தி கண்காணித்து வந்தனர்.
அனைத்து கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்க்கும் வகையில், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் பெரிய அளவிலான தொலைக்காட்சி வைக்கப்பட்டு, ஒரு போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சில நாட்களாக போலீசார் அமைத்த கேமராக்கள் பழுதாகியுள்ளன. இதனால் திருட்டு, வழிப்பறி மற்றும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை தடுக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.
தற்போது, 74 'சிசிடிவி' கேமராக்கள் வேலை செய்யாமல் உள்ளதால், மர்மநபர்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, மாவட்ட எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து, பழுதாகியுள்ள 'சிசிடிவி' கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி நகராட்சியில், 'சிசிடிவி' கேமராக்கள் பழுதாகியுள்ளது உண்மை தான். இந்த கேமராக்கள் விரைவில் பழுது பார்க்கப்படும். அதன்பின், அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டு குற்றச்செயல்கள் தடுக்கப்படும்.
கந்தன்,
டி.எஸ்.பி.,
திருத்தணி.