ஜனநாயகம் குறித்து திமுக பேசுவதுதான் தான் வேடிக்கை; முதல்வருக்கு அண்ணாமலை பதில்
ஜனநாயகம் குறித்து திமுக பேசுவதுதான் தான் வேடிக்கை; முதல்வருக்கு அண்ணாமலை பதில்
ADDED : ஆக 11, 2025 02:36 PM

சென்னை: திருமங்கலம் பார்முலாவுக்கு பெயர்போன திமுக தலைவர் ஸ்டாலின், ஜனநாயகம் குறித்து பேசுவதுதான் தான் வேடிக்கை என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ததாகக் கூறி தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தை பாஜ தனது மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்; ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்ப்பதற்கு பதிலாக, அவரை போனில் தொடர்பு கொண்டு, 'வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் ஓட்டுக்களை திருடி வென்றீர்களா?' என்று கேட்கலாம். ஓட்டுக்கள் திருடப்பட்டதாக அவர் சொல்லும் மகாரேவபுரா தொகுதியில் ஒருமுறை, இரு முறை அல்ல, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 4 முறை தோல்வியை சந்தித்துள்ளது.
நாளுக்கு நாள் பொய்களை சொல்லி, பிறகு உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்வது மற்றும் கொஞ்சம் கூட மானமின்றி சுற்றித் திரிவது என்பதையே ராகுல் கொள்கையாக கொண்டுள்ளார். அப்படிப்பட்டவருக்கு ஆதரவாக வருபவர், பொய்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு கட்சியின் தலைவர். மோசமான கூட்டணி.
ஓட்டுத் திருட்டுக்கு மிகவும் பிரபலமான திமுகவின் திருமங்கலம் பார்முலா. அதேபோல, பிரசாரம் முழுதும் வாக்காளர்களை கால்நடைகளைப் போல அடைத்து வைத்து, இறுதியில் அவர்களுக்கு கொலுசு, பாத்திரங்கள், குக்கர் உள்ளிட்டவை கொடுத்தது தான் திமுகவின் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பார்முலா. இப்படியிருக்கையில், தற்போது ஜனநாயகம் குறித்து பேசுவதுதான் தான் வேடிக்கை.
இந்த வெற்று நாடகங்களுக்கு பதிலாக, முதல்வர் ஸ்டாலின் அவரது சகோதரர் ராகுலை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியின் நோட்டீஸ்களுக்கு பதிலளிக்க உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.