கொள்முதல் செய்த நெல்மணிகள் முளைப்பு; தஞ்சையில் விவசாயிகள் கண்ணீர்!
கொள்முதல் செய்த நெல்மணிகள் முளைப்பு; தஞ்சையில் விவசாயிகள் கண்ணீர்!
ADDED : ஆக 11, 2025 01:34 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மணிகள், மழையில் நனைந்து முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், கட்டா நகரம், துகுலி, நெய் குப்பை, மருத்துவக்குடி உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.
இங்கு ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 50,000 நெல் மூட்டைகள் லாரிகள் வராததால் தேங்கியுள்ளன. மேலும் சாக்கு பற்றாக்குறை, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை போன்ற காரணங்களால் கொள்முதல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை தஞ்சை மாவட்டத்தில் மழை கொட்டியது. இதில் நெல் குவியல்கள் நனைந்தன. மாவட்டத்தில் சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று மருத்துவகுடி கொள்முதல் மையத்துக்கு வந்த விவசாயிகள், நெல்மணிகள் முளைத்திருப்பதை கண்டு வேதனை அடைந்தனர்.
'தேக்கமடைந்துள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும். முளைத்து போன நெல்மணிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலர் சுவாமிமலை விமல நாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

