/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழைய பொருள் கிடங்கில் பெரும் தீ விபத்து அடுத்தடுத்த மூன்று கடைகளும் நாசம்
/
பழைய பொருள் கிடங்கில் பெரும் தீ விபத்து அடுத்தடுத்த மூன்று கடைகளும் நாசம்
பழைய பொருள் கிடங்கில் பெரும் தீ விபத்து அடுத்தடுத்த மூன்று கடைகளும் நாசம்
பழைய பொருள் கிடங்கில் பெரும் தீ விபத்து அடுத்தடுத்த மூன்று கடைகளும் நாசம்
ADDED : ஏப் 03, 2024 01:19 AM

சென்னை:சென்னை, மடிப்பாக்கம், ராம் நகர் விரிவு, தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 38. பழைய இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை சில்லரை கடைகளில் கொள்முதல் செய்து, தன் கிடங்கில் தரம் பிரித்து, மறு சுழற்சி செய்யும் ஆலைகளுக்கு மொத்த விலையில் விற்பனை செய்கிறார்.
இந்த கிடங்கு, 4,000 ச.அடி., பரப்பில் உள்ளது. நேற்று காலை 10:30 மணி அளவில், கிடங்கில் திடீரென தீ பிடித்தது. தகவலறிந்து, துரைப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால், பழைய பிளாஸ்டிக், கழிவு எண்ணெய் உள்ளிட்டவை இருந்ததால், கரும்புகையுடன் மேலும் கொழுந்து விட்டெரிந்தது.
இதையடுத்து, மேடவாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து, கூடுதலாக ஆறு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அதற்குள், சுற்றுவட்டார பகுதி மக்கள் பலர் மூச்சுத்திணறல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டதால், ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டன.
அப்பகுதியில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.
இந்த பெரும் விபத்தில், அருகில் இருந்த பிரியாணி கடை, சலுான் கடை உள்ளிட்ட மூன்று கடைகளும் தீக்கிரையாயின.
மொத்தம் 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஏழு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின், கிடங்கிற்கு உள்ளே சென்று தீயை அணைக்கவும், பாதி எரிந்த நிலையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தவும் ஜே.சி.பி., வாகனம் வரவழைக்கப்பட்டது.
இச்சம்பவத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

