/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பு இன்றி சீரழிந்த குளம்
/
பராமரிப்பு இன்றி சீரழிந்த குளம்
ADDED : பிப் 27, 2025 12:59 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது வி.ஜி.ஆர்.கண்டிகை. இந்த கிராமத்தின், தெற்கு பகுதியில் கிராம பொது குளம் உள்ளது. சிறுகுமி பகுதியில் உள்ள மலைகளில் இருந்து இந்த குளத்திற்கு நீர்வரத்து உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த குளம், துார்வாரி சீரமைக்கப்பட்டது. இதற்கான பணிகள், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின், தொடர் பராமரிப்பு இல்லாததால், தற்போது, செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளன.
குளத்தில் குட்டையாக சிறிது தண்ணீர் தேங்கியுள்ளது. குளத்தின் படித்துறையும் புதரில் மறைந்துள்ளது. இதனால், குளத்தை யாரும் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளக்கரையில் உள்ள வேப்ப மரமும் பட்டுப்போயுள்ளது.
வி.ஜி.ஆர்.கண்டிகையின் ஒரே நீராதாரமாக விளங்கும் இந்த குளத்தை முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படும் என, தெரிவிக்கின்றனர்.