/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் தொடரும் அடாவடி ரூ.1,800 கோடியில் பணிகள் முடிந்தும் சிக்கல்
/
குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் தொடரும் அடாவடி ரூ.1,800 கோடியில் பணிகள் முடிந்தும் சிக்கல்
குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் தொடரும் அடாவடி ரூ.1,800 கோடியில் பணிகள் முடிந்தும் சிக்கல்
குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் தொடரும் அடாவடி ரூ.1,800 கோடியில் பணிகள் முடிந்தும் சிக்கல்
ADDED : மார் 10, 2025 12:11 AM
சென்னையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மாநகராட்சி விரிவாக்கத்திற்கு முந்தைய மண்டலங்களில், ஏற்கனவே குடிநீர், கழிவுநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளதால், அவை தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சியில் புதிதாக சேர்ந்த மண்டலங்களில், முந்தைய ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் அமைத்த கட்டமைப்பு வழியாக குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், அந்த பகுதிகளில் பெரும்பாலும் கழிவுநீர் இணைப்பு திட்டம் இல்லை.
சென்னை மாநகராட்சியுடன் அவை இணைந்தபின், குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. இப்பணிகளுக்காக, 2012ம் ஆண்டு முதல், 6,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு உள்ளது. தற்போது, 3,020 கோடி ரூபாயில் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதில், கடந்த ஓராண்டில் மட்டும், 1,800 கோடி ரூபாயில் பணி முடித்து, குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க, வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், இணைப்பு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
குடிநீர், கழிவுநீர் லாரிகள் வைத்து, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் சில கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க., -- அ.தி.மு.க., நிர்வாகிகள், இணைப்பு வழங்க இடையூறு செய்கின்றனர்.
உரிய முறையில் விண்ணப்பித்தால், ஒரு இணைப்புக்கு, 10,000 முதல் 50,000 ரூபாய் வரை, 'கட்டிங்' கேட்கின்றனர். இதனால், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
மூன்றடுக்கு கட்டடத்திற்கு, இணைப்பு கட்டணத்துடன், சதுர அடிக்கு, 25 ரூபாய் வீதம் மேம்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், பல வார்டுகளில் இணைப்பு பெறாமல் இருந்தனர். தற்போது பகுதிகளின் வளர்ச்சி அதிகரித்ததால், மேம்பாட்டு கட்டணம் செலுத்தி, இணைப்பு பெற்று வருகின்றனர்.
ஆனால், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் - 2019ன் படி, வீட்டுக்கு 750 சதுர மீட்டர் பரப்பு மற்றும் வணிகத்திற்கு 300 சதுர மீட்டர் பரப்புக்கு மேல் இருந்தால், கட்டட நிறைவு சான்று தேவை.
இந்த சட்டம் வெளிவரும் முன், அப்போதைய உள்ளாட்சி நிர்வாகத்திடம் இணைப்பு பெற்றிருந்தால், வாரியம் புதிய இணைப்பை வழங்குகிறது. உரிய அனுமதியின்றி, ஆட்சேபனை இடத்தில் கட்டடம் கட்டி இணைப்பு பெறாமல், தற்போது இணைப்புக்கு விண்ணப்பித்தால், கட்டட நிறைவு சான்று தேவை.
இதனால், விரிவாக்க மண்டலங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்தும், குடிநீர், கழிவுநீர் திட்டத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியாமல் வாரியம் திணறுகிறது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
குடிநீர், கழிவுநீர் இணைப்பு கேட்கும் மக்கள் அலுவலகம் வராமலேயே, சேவையை பெறும் வகையில், 'ஆன்லைன்' வழியாக எளிமைப்படுத்தி உள்ளோம்.
வாரியம் விதித்த கட்டணத்தைவிட அதிகமாக, சில கவுன்சிலர்கள், வட்ட செயலர்கள், 'கட்டிங்' கேட்பதால், பலர் இணைப்பு பெற யோசிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம், கட்டட நிறைவு சான்று கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், தளர்வு வழங்க முடியாததால், பழைய பெரிய கட்டடங்களுக்கு இணைப்பு வழங்க முடியவில்லை.
இணைப்பு கட்டணத்தில் தான், திட்டத்திற்காக செலவழித்த வங்கி கடனை செலுத்த வேண்டும். குடிநீர், கழிவுநீர் லாரிகளுக்கு கடிவாளம் போட்டால், இணைப்பை வேகப்படுத்த முடியும். இதற்கு, அமைச்சர் நேரு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.