/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணல் கொள்ளையை தடுப்பதில் அதிகாரிகள்...அலட்சியம்: சமூக விரோதிகளால் கோவில் நிலங்கள் சூறை
/
மணல் கொள்ளையை தடுப்பதில் அதிகாரிகள்...அலட்சியம்: சமூக விரோதிகளால் கோவில் நிலங்கள் சூறை
மணல் கொள்ளையை தடுப்பதில் அதிகாரிகள்...அலட்சியம்: சமூக விரோதிகளால் கோவில் நிலங்கள் சூறை
மணல் கொள்ளையை தடுப்பதில் அதிகாரிகள்...அலட்சியம்: சமூக விரோதிகளால் கோவில் நிலங்கள் சூறை
ADDED : மார் 06, 2025 10:46 PM

மீஞ்சூர்:மேலுார் திருவுடையம்மன் கோவில் நிலத்தில் இரவு நேரங்களில், சமூக விரோதிகளால் நடத்தும் மணல் கொள்ளையை தடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், சுற்று சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில் பிரசித்த பெற்ற திருமணங்கீஸ்வரர் -திருவுடையம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலைத்துறையினர் கட்டுபாட்டில் உள்ள இக்கோவில், தமிழ்நாடு சுற்றுலா துறையின் நவசக்தி ஸ்தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
அதே கிராமத்தில் கோவிலுக்கு பின்புற பகுதியில், 45 ஏக்கர் பரப்பு கோவில் நிலம் பராமரிப்பின்றி உள்ளது.
இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவு நேரங்களில் சவுடு மற்றும் களி மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்
பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், 10அடி ஆழத்திற்கு மண்ணை வெட்டி எடுத்து, டிராக்டர், லாரி வாயிலாக விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
கோவில் நிலத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் ஐந்து அடி ஆழத்தில் கீழே உள்ள பகுதிகளில் கிடைக்கும் மணலும் கொள்ளை போகிறது.
தனியார் நிலங்களில் மறைவான பகுதிகளிலும், இவை குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. ஆழமாக மண் வெட்டி எடுக்கப்படுவதால், அங்குள்ள பனை மரங்களும் கீழே விழும் நிலையில் உள்ளன.
கடந்த காலங்களில் மண் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மழைநீர் தேங்கி, சிறு சிறு குட்டைகளாக மாறி வருகின்றன. தற்போதும் மண் கொள்ளை தொடர்வதால், விரைவில், 45 ஏக்கர் பரப்பில் புதிய நீர்தேக்கமே உருவாகும் நிலை இருக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால் கோவில் நிலத்தை எதிர்காலத்தில் எந்தவொரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
தினமும், இரவு நேரங்களில் நடைபெறும் சவுடு, களிமண் மற்றும் மணல் திருட்டு குறித்து காவல், வருவாய், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், தடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக சுற்று சூழல் ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கோவில் நிலத்தில் மண் அள்ளுவது அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது. கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையை தருகிறது. தனிநபர்களின் வருவாய்க்காக, கனிமவளங்கள் கொள்ளை போகிறது.
காவல், வருவாய், ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை உடனடியாக ஆய்வு செய்து, மண் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலங்களை உரிய அளவீடு செய்து, அவற்றை விவசாயம் சார்ந்த பயன்பாட்டிற்கு ஏலம் விட்டு, அதன் வாயிலாக வருவாய் ஈடட்டலாம். பயன்பாடு இருந்தால், மண் கொள்ளை முற்றிலும் தடுக்க முடியும். கோவில் நிலங்களை பாதுகாப்பதில் ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
கோவிலில் மண் கொள்ளை போவது குறித்து மீஞ்சூர் காவல் நிலையம், ஆவடி கமிஷனர், வட்டாட்சியர், மாவட்ட கலெக்டர் என அனைத்து தரப்பினரிடமும் புகார் கொடுத்து உள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளனர்.
கோவில் நிலத்தை மொத்தமாக குத்தகை எடுக்க யாரும் முன்வரவில்லை. இது குறித்தும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. விரைவில் நிலங்களை முழுமையாக அளவீடு செய்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரி
மீஞ்சூர்.