/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வில்லங்க சான்று பெற முடியாமல் ஓராண்டாக பயனாளிகள் தவிப்பு
/
வில்லங்க சான்று பெற முடியாமல் ஓராண்டாக பயனாளிகள் தவிப்பு
வில்லங்க சான்று பெற முடியாமல் ஓராண்டாக பயனாளிகள் தவிப்பு
வில்லங்க சான்று பெற முடியாமல் ஓராண்டாக பயனாளிகள் தவிப்பு
ADDED : மே 29, 2024 06:31 AM
திருத்தணி : சார்-பதிவாளர் அலுவலகத்தில், வீட்டுமனைகள், விவசாய நிலம் உள்ளிட்ட நிலம் பத்திரப்பதிவு செய்வதற்கு வில்லங்கச்சான்று அவசியம். கடந்த 1975 ம் ஆண்டு முதல் தற்போது வரை வில்லங்கச்சான்றுகள் ஆன்-லைன் மூலம் எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு தேவையான வில்லங்கச்சான்று பெறுவதற்கு சார்-பதிவாளர் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பித்தால், அலுவலகத்தில் உள்ள கையேடு புத்தக பதிவேட்டில் இருக்கும் விவரங்கள் குறித்து கையேடு வில்லங்கசான்று சார்-பதிவாளரால் வழங்கப்படும்.
இந்நிலையில் திருத்தணி சார்--பதிவாளர் அலுவலகத்தில் சில மாதங்களாக, 1975 ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளுக்கான கையேடு வில்லங்கச்சான்று கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு குறித்த நேரத்தில் வழங்காமல் அலைகழித்து வருகின்றனர்.
தற்போது, 200 பேர் வில்லங்க சான்று வழங்க கோரி, விண்ணப்பித்து, ஓராண்டாக காத்திருக்கின்றனர்.
விண்ணப்பித்தவர்கள் பலமுறை சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் சார்-பதிவாளரிடம் கேட்கும் போது, சரியான தகவல் கூற மறுக்கின்றனர்.
இது குறித்து திருத்தணி சார்-பதிவாளர் சுகன்யா கூறியதாவது:
புதிய சார்-பதிவாளர் அலுவலகம் கட்டுமான பணிகள் நடந்து வந்ததால், பழைய சென்னை சாலையில் தனியார் கட்டடத்தில் தற்காலிகமாக சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இதனால் பழைய சார்-பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் கொண்டு வருவதற்கு முடியவில்லை.
மேலும், கையேடு வில்லங்கச்சான்று கோரி விண்ணப்பித்தவர்களின் பத்திரம் தெலுங்கு மொழியில் இருப்பதாலும், கையேடு வில்லங்கச்சான்று பார்க்கும் ஊழியர், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதால் குறித்த நேரத்தில் சான்றுகள் வழங்க முடியவில்லை. இருப்பினும் விண்ணப்பித்த அனைவருக்கும் விரைவில் வில்லங்கச்சான்று வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.