/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டி
/
அரசு பள்ளி வளாகத்தில் பழுதடைந்த குடிநீர் தொட்டி
ADDED : ஆக 18, 2024 11:09 PM

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி, கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து பள்ளிக்கும், கிராம மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் தொட்டியை பராமரிக்காததால், தற்போது தொட்டியின் துாண்கள் சேதம் அடைந்துள்ளன. துாண்களின் சிமென்ட் தளம் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
அந்த கம்பிகளும் துரு பிடித்துள்ளதால், எந்த நேரத்திலும் தொட்டி இடிந்து விழும் அபாய நிலை உள்ளது. பள்ளி மாணவர்கள் உணவு இடைவேளையின் போது பழுதடைந்த குடிநீர் தொட்டி அருகே விளையாடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து அகற்றி புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.