/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செலவு விபரம் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்... தகுதி நீக்கம்!; தேர்தல் செலவின ஆலோசனையில் கலெக்டர் கறார்
/
செலவு விபரம் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்... தகுதி நீக்கம்!; தேர்தல் செலவின ஆலோசனையில் கலெக்டர் கறார்
செலவு விபரம் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்... தகுதி நீக்கம்!; தேர்தல் செலவின ஆலோசனையில் கலெக்டர் கறார்
செலவு விபரம் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்... தகுதி நீக்கம்!; தேர்தல் செலவின ஆலோசனையில் கலெக்டர் கறார்
ADDED : ஏப் 01, 2024 07:07 AM

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், திருவள்ளூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் அவர்களது முகவர்களுடன், தேர்தல் செலவினம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
பொது பார்வையாளர் அபு இம்ரான், தேர்தல் செலவின பார்வையாளர்கள் லோகேஷ் தாமூர், சஞ்சய் பகத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுரை வழங்கினார்.
அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் உரிய முறையில் கணக்கு பராமரித்து, உரிய தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்.
வங்கி கணக்கு
தவறினால், இந்திய தண்டனை சட்ட பிரிவுகளில் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 77-ன்படி, அதிகபட்சம் 95 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட வேண்டும்.போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர் அல்லது அவரது முகவர் தேர்தல் செலவினத்திற்காக, தனியாக ஒரு வங்கி கணக்கு துவங்க வேண்டும்.
மனு தாக்கல் செய்த நாள் முதல், தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் வரையான செலவு கணக்கை பாராமரிக்க வேண்டும். தேர்தல் செலவினம் தொடர்பான அனைத்து வரவு செலவும், அவர்கள் துவங்கிய வங்கி கணக்கின் வாயிலாகதான் மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சி மற்றும் வேட்பாளரின் குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படும். தேர்தல் செலவின கணக்குகளை அதற்கான ரசீது, பதிவேடு, வங்கிக் கணக்கு அறிக்கை மற்றும் அனுமதி தொடர்பான ஆவணங்களுடன் உரிய படிவங்களில் தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வின் போது தொடர்புடைய ஆவணங்களுடன் பதிவேடுகள் சமர்ப்பிக்க வேண்டும். கட்சி உள்ளிட்ட பிறரிடமிருந்து பெறப்படும் நன்கொடை செலவினங்களும் முழு விபரங்களுடன் எழுத வேண்டும்.
'ஆன்லைன்'
வேட்பாளர் தன் தேர்தல் செலவுக்குரிய அனைத்து தொகையையும் தேர்தல் செலவுக்காக துவங்கப்பட்ட வங்கி கணக்கில் மட்டுமே 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும்.
நன்கொடையோ, செலவினமோ, 10,000 ரூபாய்க்கு மேல் பணமாக வழங்கக் கூடாது. அதற்கு மேல் காசோலை மற்றும், 'ஆன்லைன்' பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
நட்சத்திர பேச்சாளர், கட்சி தலைவர்கள், பேரணி, பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் அல்லது அவரின் தேர்தல் முகவர் மேடையில் பங்கேற்றால், அவர்களின் பயண செலவு தவிர, பேரணி மற்றும் பொதுக்கூட்ட முழு செலவும் வேட்பாளர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.
வேட்பாளர்களின் கணக்குகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்த, 3 நாட்களுக்குள் செலவின பார்வையாளர் ஆய்வுக்கு, சமர்ப்பிக்க வேண்டும்.
மறைக்கப்படும் தேர்தல் செலவினங்களை, மாவட்ட தேர்தல் செலவின கண்காணிப்பு குழுவினரால் கணக்கிடப்பட்டு, அவரது கணக்கில் சேர்க்கப்படும்.
புகார்
குறிப்பிட்ட நாளில், தேர்தல் செலவினை சமர்ப்பிக்காவிட்டால், காரணம் கேட்கப்பட்டும், அதன்பின்பும், 48 மணி நேரத்திற்குள் பதிலறிக்கை தாக்கல் செய்யப்படாத, வேட்பாளர் மீது நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யப்படும்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, 30 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும் செலவு கணக்கை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - தேர்தல் சத்யா பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

