/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஜனவரியில் திறப்பு பணிகளை வேகப்படுத்தும் சி.எம்.டி.ஏ.,
/
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஜனவரியில் திறப்பு பணிகளை வேகப்படுத்தும் சி.எம்.டி.ஏ.,
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஜனவரியில் திறப்பு பணிகளை வேகப்படுத்தும் சி.எம்.டி.ஏ.,
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஜனவரியில் திறப்பு பணிகளை வேகப்படுத்தும் சி.எம்.டி.ஏ.,
ADDED : மே 05, 2024 11:02 PM

திருவள்ளூர்: சென்னை மாநகரின் அசுர வளர்ச்சிக்கு ஏற்ப, மக்கள் தொகை, வாகன பெருக்கத்தின் காரணமாக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
அதனால், சென்னை நகரில் ஏற்படும் நெரிசலை குறைக்க, புறநகரில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க, சி.எம்.டி.ஏ., திட்டமிடப்பட்டது.
மாதவரம், வேளச்சேரி, கிளாம்பாக்கம், குத்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், புதிய புறநகர் பேருந்து நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், வேளச்சேரி பேருந்து நிலைய திட்டம் கைவிடப்பட்டது.
பின், மாதவரம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள், அங்கிருந்து இயக்கப்படுகின்றன.
தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்ல வசதியாக வண்டலுார், கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கரில் 393.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2019ல் துவங்கிய புதிய பேருந்து முனையமும், 2023, டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.
இதையடுத்து, மாநில வீட்டுவசதி வாரியத்தின், திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில், 336 கோடி ரூபாயில், ஐந்து லட்சம் சதுர அடியில் குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், 2021 பிப்ரவரியில் துவங்கின.
மேற்கு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக, இந்நிலைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது திட்ட மதிப்பீடு திருத்தியமைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு தளத்துடன் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் பேருந்து நிலைய பணியாளர்கள் ஓய்வறை உட்பட கூடுதல் வசதிகளுடன், 396 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி நடந்து வருகிறது.
இந்த பேருந்து நிலைய பணிகள், முதன் முதலாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் அமைகிறது. இந்த மாதம், பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டிருந்த நிலையில், கூடுதல் பணிகள் நடப்பதால், திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.எம்.டி.ஏ, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து வசதிகளுடன் முதன் முதலாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணி நடந்து வருகிறது. 82 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
மேலும், 70 புறநகர் பேருந்துகள், 30 ஆம்னி பேருந்துகள், 36 மாநகர பேருந்துகள் மற்றும் 48 புறநகர் பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.
தவிர, 1,680 டூ - வீலர்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், இரண்டு அடுக்கு வாகன நிறுத்தும் வசதியும் கட்டப்பட்டு வருகிறது.
நான்கு மின்துாக்கிகள், மூன்று எஸ்கலேட்டர்கள், மூன்று நகரும் படிக்கட்டுகள் மற்றும் ஒரு கட்டுப்பாட்டு அறையும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்திற்கான சாலை வசதி, மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வகையில் கால்வாய் வசதி போன்றவையும் திட்டமிட்டுள்ளதால், பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. தவிர, பேருந்து நிலையத்திற்காக, எலிவேஷன் எனும் நிலையத்தின் முகப்பு வடிவமைப்பில் சற்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தினமும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணி நடக்கிறது. அனைத்து பணிகளும் 2024, டிசம்பர் மாதம் இறுதியில் நிறைவடைந்து, 2025, ஜன., 1ல் இருந்து பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.