/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேர்ச்சி குறைவால் கல்வி துறைக்கு கலெக்டர் 'டோஸ்': தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற உத்தரவு
/
தேர்ச்சி குறைவால் கல்வி துறைக்கு கலெக்டர் 'டோஸ்': தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற உத்தரவு
தேர்ச்சி குறைவால் கல்வி துறைக்கு கலெக்டர் 'டோஸ்': தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற உத்தரவு
தேர்ச்சி குறைவால் கல்வி துறைக்கு கலெக்டர் 'டோஸ்': தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் பெற உத்தரவு
ADDED : மே 11, 2024 09:45 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததால், கல்வி துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்' விட்டுள்ளார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டு, 25,625 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில், 23,401 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.32. மாநில அளவில், திருவள்ளூர் மாவட்டம், 36வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
கடந்த, 2023ல் தேர்ச்சி சதவீதம் 92.47 ஆக இருந்த நிலையில், மாநில அளவில் 27 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி சதவீதமும் கடந்த ஆண்டை விட, 1.15 சதவீதம் குறைந்து விட்டது.
குறிப்பாக அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை, 102 பள்ளிகளில் தேர்வு எழுதிய, 11,997 பேரில், 10,162 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 84.70 சதவீதமாக உள்ளது. மேலும், 5அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
10ம் வகுப்பு
திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 32,511 பேர் எழுதினர். இதில், 28,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம், 86.52 சதவீதமாகும். இது, கடந்த ஆண்டு பெற்ற, 88.80 சதவீதத்தை விட, 2.28 சதவீதம் குறைவாகும். அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய, 3,293 பேர் தேர்ச்சி பெறவில்லை. மேலும், மாநில அளவிலும், 35ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள, 205 அரசு பள்ளிகளில், 20 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கொரோனா காலத்திற்குப் பின், பிளஸ் 2 தேர்வில், 2022ல்-93.60, 2023ல்-92.47, 2024ல்-91.32 என, தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே போல், பத்தாம் வகுப்பு தேர்வில், 2022ல்- 88.97,2023ல்-88.80, 2024ல்-86.52 எனவும், தேர்ச்சி விகிதம் சரிந்து கொண்டே வருகிறது. இது, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வுகளில், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், மாவட்ட முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலர், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆலோசனை குழு உறுப்பினர்களுடன், பல முறை ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கினார். மேலும், பள்ளிகளில் சிறப்பு வகுப்பு, தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
இருப்பினும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் படிப்படியாக சரிந்து கொண்டே வருவதால், கலெக்டர் அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், திருவள்ளூர் மாவட்டம் மிகவும் பின்தங்கியதால், கலெக்டர் கடும் அதிருப்தியடைந்துள்ளார். தேர்வு முடிவு வெளிவந்ததும், கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம், அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன், விளக்கம் கேட்டார்.
குறிப்பாக அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணத்தை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அரசு பள்ளிகளில் தோல்வியடைந்த மாணவர்களை உடனடியாக அழைத்து, அரசு நடத்தவுள்ள உடனடி தேர்வில் பங்கேற்க வைத்து, அவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெறும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கல்வி துறை வட்டாரங்கள் கூறின.