/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி மாஜி ஆசிரியர் மீது புகார்
/
அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி மாஜி ஆசிரியர் மீது புகார்
அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி மாஜி ஆசிரியர் மீது புகார்
அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி மாஜி ஆசிரியர் மீது புகார்
ADDED : ஜூலை 02, 2024 07:01 AM

திருவள்ளூர்: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஸ்வர்ணதாரா நிதி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டியுடன் முதலீட்டு பணம் திரும்ப தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், கடந்த மே மாதம், 30ம் தேதி, நொளம்பூர் போலீசார் வழக்கு பதிந்து நிதி நிறுவன தலைவர் வெங்கடரங்க குப்தா, 58, மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஜெயசங்கர், 60, என்பவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் ஜெயா நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பாண்டுரெங்கன், 70, என்பவர் ஸ்வர்ணதாரா நிதி நிறுவனத்தின் வர்த்தக கூட்டாளியாகவும், அவரது குடும்பத்தினர் வணிக ஆலோகர்களாகவும் செயல்பட்டனர்.
முதலீடுகளுக்கு ஏற்ப ஆண்டு தோறும், அதிக சதவீதம் வட்டியுடன் லாபம் தருவதாக பாண்டுரெங்கன் கூறிய ஆசை வார்த்தையை நம்பி, நானும் எனது நண்பர்கள், உறவினர் என ஆறு பேர், மொத்தம், 21 லட்சம் ரூபாய் முதிலீடு செய்தோம்.
தெரிவித்தபடி நான்கு ஆண்டுகள் பணம் பெற்ற நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணம் தராமல் ஏமாற்றி வருகிறார்.
நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டதாக நிதி நிறுவன தலைவர், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் வர்த்தக கூட்டாளியான பாண்டுரெங்கன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரும் அவரது குடும்பத்தினரும் முறைகேடாக வாங்கி குவித்த சொத்துக்களை தற்போது விற்று வருகிறார். அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த மே மாதம், 7ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் வர்த்தக கூட்டாளியான பாண்டுரெங்கன் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், 'தன்னையும் தனக்கு கீழ் இயங்கிய ஏஜென்ட்களையும் ஏமாற்றி பண மோசடி செய்த ஸ்வர்ணதாரா குரூப் ஆப் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
பாண்டுரெங்கனுக்கு கீழ் செயல்பட்ட ஏஜென்டுகள் வாயிலாக, திருவள்ளூர் மாவட்டத்தில், 1,930 பேரிடம், ஸ்வர்ணதாரா நிறுவனம், 86.92 கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏமாந்தவர்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.