/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி: திருத்தணி முருகன் கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?
/
புகார் பெட்டி: திருத்தணி முருகன் கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?
புகார் பெட்டி: திருத்தணி முருகன் கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?
புகார் பெட்டி: திருத்தணி முருகன் கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?
ADDED : ஏப் 29, 2024 11:31 PM
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இதையடுத்து, கோவிலில் நடைபெறும் சேவை மற்றும் அபிஷேகத்திற்கு, மலைக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து டிக்கெட் பெறுகின்றனர். ஆனால், பக்தர்கள் பணமாக கொண்டு சென்றால் தான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
ஏனெனில், கோவில் நிர்வாகம், 'ஜிபே, போன்பே, பேடிஎம்' போன்ற வசதியில்லாததால், பக்தர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியவில்லை. மேலும், 3 கி.மீ., துாரம் உள்ள திருத்தணி பஜாருக்கு வந்து, பணம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.
எனவே, முருகன் மலைக்கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- - க.விநாயகம், திருத்தணி.
கழிவுநீரில் கால்வாய் பணி
ஒன்றிய நிர்வாகம் 'புது டெக்னிக்'
கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது கவரைப்பேட்டை. அங்குள்ள பழவேற்காடு தெருவில் கால்வாய் துார்ந்து போனதால், சாலையோரம் திறந்தவெளியில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
அந்த தெருவில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகளை ஒன்றிய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. துார்ந்து போன கால்வாயில் தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றாமல், அப்படியே கழிவுநீரில் கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தரமற்ற கால்வாயை கடமைக்கு நிறுவி வரும் பணிகளை உடனடியாக நிறுத்தி, கழிவுநீரை அகற்றிய பின் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.வெங்கடகிருஷ்ணன், கவரைப்பேட்டை.
பயணியர் நிழற்குடை
வேண்பாக்கத்தில் அமையுமா?
பொன்னேரி - மீஞ்சூர் வழித்தடத்தில் உள்ள வேண்பாக்கம் பகுதியில், நிழற்குடை வசதி இல்லை. இந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணியர் மற்றும் பள்ளி மாணவியர் வெயிலில் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இங்கு, பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளது. அரசு பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியும், அங்குள்ள மேரி மாதா சிலை அருகில் என, இருபுறமும் நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.ஜி. கிருஷ்ணா, பொன்னேரி.
பிளாஸ்டிக் விற்பனை
தடை செய்ய கோரிக்கை
திருத்தணி நகராட்சியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் காய்கறி, பூக்கடைகள், இறைச்சி கடைகள் உட்பட அனைத்து கடைகளிலும் தாராளமாக பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள் பெயரளவுக்கு சோதனை நடத்தி, மாவட்ட நிர்வாகத்திற்கு கணக்கு காட்டுகின்றனர். முதலில் பிளாஸ்டிக் கவர் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து கடைகளுக்கு அபராதம் விதித்தும், 'சீல்' வைக்க வேண்டும்.
மேலும் மக்களிடையே பிளாஸ்டிக் கவர் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல், குப்பை பிரித்து கொடுக்க வேண்டும் என, வீடு மற்றும் வணிக உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்க வேண்டும்.
- --எஸ்.முத்துக்குமார், திருத்தணி.

