ADDED : பிப் 10, 2025 02:17 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, கம்மவார்பாளையம், மனோபுரம் கிராமங்களுக்கு இடையே ஆரணி ஆறு பயணிக்கிறது. ஆற்றின் இருபுறமும் உள்ள கிராமவாசிகள் பயன்பாட்டிற்காக, 2017ல், 2.85 கோடி ரூபாயில், பாலம் அமைக்கப்பட்டது. இதில் கார், பைக், டிராக்டர் உள்ளிட்டவை பயணித்து வருகின்றன.
கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இருபுறமும் உள்ள கிராமவாசிகள் பயன்படுத்தி வரும் நிலையில், கம்மவார்பாளையத்தில் பாலத்தின் நுழைவாயில் பகுதி சேதம் அடைந்து உள்ளது. அங்கு கான்கிரீட் பெயர்ந்து பள்ளமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
அதே போல, மனோபுரம் பகுதியில், பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் உடைந்து சேதமாகி உள்ளன. அங்குள்ள இணைப்பு சாலையும் கரடு முரடாக உள்ளது. இதனால் வாகனங்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
பாலத்தின் மீது மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் செல்லும் கிராமவாசிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி வருவதால், முழுமையாக சேதம் அடைந்து வீணாவதற்கு முன், தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.